ADDED : செப் 22, 2024 04:19 AM

அவிநாசி, : அவிநாசி அருகே அடுத்தடுத்து மூன்று கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில், கடைகள் எரிந்து சாம்பலானது.
அவிநாசி, ஆட்டையாம்பாளையம் - மேட்டுப்பாளையம் செல்லும் வழியில், பரமசிவம் என்பவர் காய்கறி கடை வைத்துள்ளார். அதன் அருகிலேயே வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த பெருஞ்சுடலை என்பவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த இரு கடைகளுக்கும் அருகில் முத்துக்குமார் என்பவர் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் கடை வைத்துள்ளார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில், இந்த மூன்று கடைகளில் திடீரென தீப்பிடித்துள்ளது.
உடனே அருகில் இருந்தவர்கள் அவிநாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், விரைந்த அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மூன்று கடைகளும் முற்றிலும் தீயில் எரிந்து, பொருட்கள் சேதமாயின. சேத விவரம் மற்றும் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து, அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.