ADDED : செப் 08, 2026 08:23 PM
திருப்பூர்: நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவ., 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் வரும் 11 ம் தேதி முதல் அக்., 12 ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அதில், விண்ணப்பப்படிவம் ஏ.இ., 5 ல் 2 ரூபாய் மதிப்புள்ள கோர்ட் வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். உரிமம் கட்டணம், 1,200 ரூபாய் ஆன்லைனில் செலுத்தியதற்கான சலான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பட்டாசு இருப்பு வைத்து விற்கப்பட உள்ள இடத்தின் வரைபடம், ஆறு நகல்கள், வரைபடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிடப்பட வேண்டும்.
பட்டாசு விற்பனை செய்யும் இடம் சொந்த கட்டடமாக இருப்பின் 2026–2027 ம் ஆண்டுக்குரிய சொத்து வரி ரசீது இணைக்கப்பட வேண்டும். வாடகை கட்டடமாக இருப்பின், 2026–27 ம் ஆண்டுக்குரிய சொத்துவரி ரசீது மற்றும் சாட்சிகள் முன்னிலையில் கட்டட உரிமையாளருடன், 20 ரூபாய் மதிப்புக்கு குறையாத முத்திரைதாளில் ஏற்படுத்தி கொண்ட வாடகை ஒப்பந்த ஆவணம். மாநகராட்சி அல்லது பொதுப்பணித்துறை மற்ற துறையின் கட்டடமாக இருப்பின் அத்துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம் இணைக்கப்பட வேண்டும். பட்டாசு உரிமம் பெறுவதற்கான மாநகராட்சிக்கு கட்டட உரிமம் கட்டணம் செலுத்திய ரசீது இணைக்கப்பட வேண்டும்.
இந்த ஆவணங்களுடன் அக்., 12 ம் தேதி மாலை, 5:00 மணிக்கு முன்பாக விண்ணப்பங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். இடங்களை பார்வையிட்டு விசாரணைக்கு பின் போலீஸ்துறை மற்றும் தீயணைப்புறை ஆய்வில் செய்து பின்னே தற்காலிக உரிமம் வழங்கப்படும். குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்பின்றி தள்ளுபடி செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
