மழைக்கால பேரிடர் எதிர்கொள்ள தீயணைப்புத்துறையினர் தயார்
மழைக்கால பேரிடர் எதிர்கொள்ள தீயணைப்புத்துறையினர் தயார்
ADDED : ஜூன் 15, 2026 11:44 PM

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது, தீயணைப்புத் துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் அண்ணாதுரை, உதவி அலுவலர் வீரராஜ் ஆகியோர் தலைமையில் திரண்ட வீரர்கள், தீயிலும் வெள்ளத்திலும் சிக்கியோரை எப்படிச் சாதுரியமாக மீட்பது என நேரடி செயல்விளக்கம் அளித்தனர்.
வெள்ளத்தில் சீறிப்பாயும் ரப்பர் படகுகள், மரங்களை அறுக்கும் நவீனக் கருவிகள், லைப் ஜாக்கெட்டுகள் எனப் பேரிடர் கால உபகரணங்கள் அனைத்தும் அங்கே மக்கள் பார்வைக்காக அணிவகுத்து நின்றன.
வீரராஜ் பேசியதாவது:
எல்நினோவால் இந்த முறை 60 சதவீத மழையே இருக்கும் என்றாலும், திடீர் வானிலை மாற்றத்தால் கனமழை, வெள்ளம் வரலாம். பொதுமக்களைக் காக்க நாங்கள் எப்போதும் தயார். தாழ்வான மின்கம்பிகள், சாய்ந்த கம்பங்கள் குறித்து மின்வாரியத்திற்கு உடனே தகவல் கொடுங்கள். குழந்தைகளை மின்சாரக் கம்பங்கள் அருகே செல்ல விடாதீர்கள்.
வெள்ளம் வந்தால் நீச்சல் தெரிந்தவர்கள் சுற்றியுள்ளவர்களை மீட்க வேண்டும். நீரில் மூழ்குபவரைப் பின்புறமாகச் சென்று லாவகமாகப் பிடித்துக் கரை சேர்க்கலாம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தற்காலிக மீட்புக் கருவிகளைச் செய்யலாம்.
இடி, மின்னல் வெட்டும் போது திறந்தவெளியில் நின்று செல்போன் பேசுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
