ADDED : ஜூன் 29, 2026 11:52 PM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் நேற்று கவுன்சிலர்கள் பேசியதாவது:
கோவிந்தசாமி (3-வது மண்டல தலைவர்): குடிநீர், பாதாள சாக்கடை கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். காங்கயம் ரோட்டில் நான்காண்டுகளாக உள்ள குடிநீர் உடைப்புகளை அதிகாரிகள் சரி செய்யவில்லை.
குமார் (த.வெ.க.): தமிழகம் முழுவதும் நுாற்றுக்கணக்கான மதுக்கடைகளை மூடியுள்ள முதல்வர் விஜய்க்கு பாராட்டு தெரிவித்து மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
கோவிந்தராஜ் (2-வது மண்டல தலைவர்): குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பாதாள சாக்கடை கட்டணம் விதிப்பது தவறானது. இதில் உரிய மாற்றம் கொண்டு வர வேண்டும்.
செந்தில்குமார் (தி.மு.க.): வார்டுகளில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் அவதிப்படுகின்றனர். புகாரளித்தால் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை.
திவாகரன் (தி.மு.க.): பள்ளி விழா அழைப்பிதழ்களில் கவுன்சிலர்கள் பெயர்களைத் தவிர்க்கக் கூடாது. நஞ்சப்பா பள்ளியில் யாருடைய அனுமதியுடன் கேன்டீன் நடத்தப்படுகிறது?
கோமதி (தி.மு.க.): தோட்டத்தில் வீடு கட்டி வரி விதிக்க விண்ணப்பித்தால், லட்சக்கணக்கில் காலியிட வரி போடுகிறார்கள். தெருவிளக்கு பணிகள் பாதியில் நிற்கின்றன.
சாந்தாமணி (ம.தி.மு.க.): குறுகலான வீதிகளுக்குள் பெரிய அடைப்பு நீக்கும் லாரிகள் செல்ல முடிவதில்லை; எனவே சிறிய ரக வாகனங்களை வாங்க வேண்டும்.
அன்பகம் திருப்பதி (அ.தி.மு.க.): சொத்து வரியைக் குறைக்கப் புதிய அரசுக்கு நினைவூட்டல் அனுப்ப வேண்டும். தெருவிளக்கு, குடிநீர் வினியோகப் பணிகளுக்குக் கவுன்சிலர்களிடம் கையொப்பம் பெற வேண்டும்.
ரவிச்சந்திரன் (இந்திய கம்யூ.): 3 நாள் குடிநீர் சப்ளை 8 நாட்களுக்கு மேல் தாமதமாவது ஏன்? அம்ரூத் திட்டப் பணிகளை ஆய்வு செய்யச் சிறப்புக் குழு அமைக்க வேண்டும்.
லோகநாயகி (தி.மு.க.): கொசு மருந்து தரமாக இல்லை; மாதம் ஒருமுறைதான் தெளிக்கின்றனர். பிளீச்சிங் பவுடரையும் முறையாகப் போட வேண்டும்.
தங்கராஜ் (அ.தி.மு.க.): மின் வாரியத்தினர் குழி தோண்டும்போது குடிநீர் குழாய்கள் சேதமாகின்றன. அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
சேகர் (அ.தி.மு.க.): காலேஜ் ரோட்டில் குழிகள் அதிகரித்து விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்ததால் அம்ரூத் திட்டத்தை முடிக்காமல் வைத்துள்ளனர்.
சுபத்ரா தேவி (தி.மு.க.): தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் பெண்கள் நடமாட அச்சப்படுகின்றனர். 4 ஆண்டுகளாகக் குடிநீர் குழாய் பணிகள் முடிவடையவில்லை.
மணிமேகலை (மா.கம்யூ.): வார்டுகளில் குப்பை வண்டிகள் சரிவர வருவதில்லை. குப்பைகளை அகற்றக் கேட்டால் உரிய பதில் இல்லை; கவுன்சிலர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது.
அருணாசலம் (இ.கம்யூ.): ஐந்தாண்டாக என் வார்டில் எந்தப் பணியும் நடக்கவில்லை. மாநகராட்சியுடன் இணைந்ததை விட, பழையபடி ஊராட்சியாக இருந்தபோதே பரவாயில்லை என்ற நிலை உள்ளது.
பாலசுப்ரமணியம் (பொறுப்பு மேயர்): சொத்து வரிப் பிரச்னை குறித்து எம்.பி, முதல்வரைச் சந்திக்க உள்ளார். அடுத்த கூட்டத்தில் கட்டண உயர்வு ரத்து தீர்மானம் வரும். தெருவிளக்குகளைக் கண்காணிக்கச் சிறப்புக் குழுவினர் நியமிக்கப்பட்டு, வீதிகளில் ஆய்வு செய்வர்.
அமித் (கமிஷனர்): கால்வாயில் கழிவுநீரைத் திறப்பவருக்கு அபராதம் விதிக்கப்படும். குடிநீர் திட்டப் பணிகள் செப்டம்பருக்குள் முழுமையடையும். திடக்கழிவு மற்றும் குடிநீர் பணிகளில் கூடுதல் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
