/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மீண்டும் முதலில் இருந்தா... பல்லடம் புறவழிச்சாலை திட்டம் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றம்
/
மீண்டும் முதலில் இருந்தா... பல்லடம் புறவழிச்சாலை திட்டம் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றம்
மீண்டும் முதலில் இருந்தா... பல்லடம் புறவழிச்சாலை திட்டம் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றம்
மீண்டும் முதலில் இருந்தா... பல்லடம் புறவழிச்சாலை திட்டம் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றம்
ADDED : மே 28, 2023 01:13 AM

பல்லடம் புறவழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றப்பட்டதன் காரணமாக, அளவீடு பணிகள் மீண்டும் முதலில் இருந்து துவங்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
பல்லடம், மே 28--
பல்லடம் நகரை கடந்து செல்லும் கோவை-- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பிரதான வழித்தடமாக உள்ளது. கோவை வழியாக கேரள மாநிலத்தை இணைப்பதால், வாகன போக்குவரத்துக்கு இது மிக முக்கிய சாலையாக உள்ளது. இத்துடன், திருப்பூர், மதுரை, உடுமலை, பொள்ளாச்சி, அவிநாசி, கொச்சி செல்லும் மாநில நெடுஞ்சாலைகளும் இணைவதால், பெரு நகரங்களுக்கு இணையான போக்குவரத்து பல்லடத்தில் காணப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டே, பல்லடம் முதல் காரணம்பேட்டை வரை, தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இருப்பினும், போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.
நகரப் பகுதியில் ஏற்படும் நெரிசலை கருத்தில் கொண்டு, 45 கோடி ரூபாய் மதிப்பில், காளிவேலம்பட்டி முதல் மாதப்பூர் வரை, புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்காக, நபார்டு மற்றும் கிராம சாலைகள் சார்பில், அளவீடு பணிகளும் நடந்தன.
இதோ வந்துவிடும் என, புறவழிச் சாலைக்காக பல்லடம் மக்கள் காத்திருந்து ஐந்து ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்கிடையே, புறவழிச்சாலை திட்டமானது, தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் அனைத்து புறவழிச்சாலை திட்ட பணிகளையும் தேசிய நெடுஞ்சாலைதான் மேற்கொள்ள வேண்டும் என, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன் அடிப்படையில், பல்லடம் புறவழிச்சாலை திட்டமும் தேசிய நெடுஞ்சாலையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புறவழிச்சாலைக்காக மாநில அரசு ஒதுக்கிய, 45 கோடி ரூபாய் நிதி வாபஸ் பெறப்படலாம். தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால், உரிய ஒப்புதல் கிடைத்ததும், ஓராண்டுக்குள் பணிகள் நிறைவடைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.