ADDED : ஏப் 21, 2025 05:47 AM

திருப்பூர் : மீன் பிடி தடைக்காலம் காரணமாக திருப்பூர் மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைந்தது; விற்பனை அதிகரித்ததால் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
ஏப்ரல், 14 முதல், ஜூன், 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, ராமநாதபுரம், துாத்துக்குடி, நாகை, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட, 14 கடலோர மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்ல முடியாது.
தடைக்காலம் துவக்கம், ஈஸ்டர் தொடர் விடுமுறையால் மீனவர்கள் கடலுக்கு செல்வது குறைந்துள்ளது. திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு கடல் மீன் வரத்து, 10 டன் குறைந்து நேற்று, 40 டன் மீன் மட்டுமே விற்பனைக்கு வந்தது.
கடந்த, 6ம் தேதி ராமநவமி, கடந்த வாரம் தமிழ்ப்புத்தாண்டு என்பதால், மீன் விற்பனை குறைவாக இருந்தது.நேற்று மீன் வாங்க அதிகளவில் மக்கள் குவிந்தனர். மீன்கள் விலை (கிலோ) நிலவரம்(அடைப்புக்குறிக்குள் முந்தைய வார விலை): மத்தி- 140 ரூபாய்(80-100); வஞ்சிரம் - 1000 ரூபாய்(800 ரூபாய்); பாறை - 230 ரூபாய்(120-180 ரூபாய்); அயிலை - 300 (200 ரூபாய்).
----
----
தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க நேற்று குவிந்த மக்கள்.

