ADDED : மே 04, 2026 06:26 AM

அவிநாசி: தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதி நிலவவும் அவிநாசி மற்றும் சேவூர் பகுதிகளில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அவிநாசி தொகுதிக்குட்பட்ட இந்தப் பகுதிகளில், கூடுதல் எஸ்.பி. முருகவேல் முன்னிலையில், அவிநாசி டி.எஸ்.பி. கனகசபாபதி இந்த அணிவகுப்பைத் தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் ராஜபிரபு, விஜயசாரதி, முத்துமாரியம்மாள், அமுதா மற்றும் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்து அணிவகுப்பை வழிநடத்தினர்.
புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, தாலுகா அலுவலகம் வரை சென்றடைந்தது. அதேபோல, சேவூர் காவல் நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு அவிநாசி சாலை, சேவூர் கைகாட்டி, புளியம்பட்டி சாலை, ராஜ வீதி மற்றும் கோபி சாலை வழியாகச் சென்று மீண்டும் காவல் நிலையத்தையே வந்தடைந்தது.
தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 14-ம் அணியினர் உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.
