/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அன்றாட உணவில் அறுசுவையும் அத்தியாவசியம்
/
அன்றாட உணவில் அறுசுவையும் அத்தியாவசியம்
ADDED : ஜன 04, 2026 04:42 AM

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட 11வது ஆண்டு விழாவில் பங்கேற்ற, தமிழக அரசின் திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் சிவராமன், உணவியல் நடைமுறைகள் குறித்து பேசியதாவது:
தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது; குறிப்பாக, ஆண்களுக்கு, குடல் மற்றும் இறைப்பை புற்றுநோய் பாதிப்பு அதிகமாகியுள்ளது. சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, சிறுநீரக பாதிப்பு ஆகியனவும் அதிகரித்துள்ளது; நமது வாழ்வியல் முறையும், உணவு முறையும் மாறியதன் விளைவாக, அந்நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடிவதில்லை.
சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் சீராக்க வேண்டும். தற்போது, 25 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இளம் வயது மரணமும் அதிகரித்துள்ளது. முதுமையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், தற்போது இளம் வயதிலேயே வந்து விடுகின்றன. ஒவ்வொருவரும், ஒவ்வொரு வேளை உணவிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்; சிறுதானிய உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்நாடகாவில் உள்ள திம்பக்கூர்' என்ற கிராமம், சிறுதானிய உற்பத்தியில் முன்னேறி, நாடு முழுவதும் வர்த்தகம் செய்கிறது. நாம் அக்கறை கொண்டால் மட்டுமே அடுத்த தலைமுறையை பாதுகாக்க முடியும். கடந்த, 20 ஆண்டு போராட்டத்தால், சிறுதானிய உணவு வீடுகளில் சமைப்பது அதிகரித்துள்ளது. உணவு என்பது, மருத்துவ பயன்பாடு நிறைந்த உணவாக இருக்கும் வகையில் தேர்வு செய்ய வேண்டும்.
உற்சாகத்துக்காக தேனீராகவோ, உணவாகவோ இருக்க கூடாது. டீ என்ற பெயரில், வீடுகளில் தினமும் தேயிலை பால் பாயசம் குடிக்கின்றனர். தேநீரின் சத்துக்களை, பால் குறைத்துவிடுகிறது. கடந்த, 250 ஆண்டுகளுக்கு முன், வீட்டின் அருகே கிடைத்த, முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி செடிகளை கஷாயம் வைத்து குடித்துள்ளனர்.
குடல் சுத்தம் அவசியம் காலை, பால் கலந்த டீ குடிப்பதற்கு பதிலாக, 'பிளாக் டீ' குடிக்கலாம். அதைவிட, நெல்லி டீ குடிக்கலாம். நெல்லிக்காய் பொடியை வாங்கி, சுடுநீரில் கலந்து, தேன்கலந்து காலையில் குடிக்கலாம். நெல்லிக்காயில் மட்டுமே, உலர்ந்த பிறகும், 'வைட்டமின் சி' பாதுகாப்பாக கிடைக்கும். ஆவாரை டீயும் குடிக்கலாம்.
கோடை காலங்களில், பழைய சாதத்து தண்ணீரை குடிப்பதால், நமது குடலில் தங்கி நன்மை செய்யும், நல்ல நுண்ணுயிர்கள் நமக்கு கிடைக்கும். குடல் நன்றாக இருந்தால் மட்டுமே மூளை வேலை செய்யும். எனவே, வயிற்றை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு தற்போது ஏற்பட்டுள்ளது. நவீன அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், சிறுதானிய உணவில் இருந்து, பல்வேறு சத்துக்கள் கூட்டு தொகுப்பாக கிடைக்கின்றன.
தினமும் இவற்றை உட்கொள்ளும் போது, உடல் நலன் பாதுகாக்கப்படும். உடலுக்கு ஏற்படும் நோய் பாதிப்பை, உடலே தானியங்கி முறையில் சரிசெய்து கொள்ளும்; நாம் சரியான உணவு எடுத்துவர வேண்டும். காலை சிற்றுண்டியில், அதிக புரதம் இருக்க வேண்டும். தாவரத்தில் புரதம் குறைவு என்பதால், ஒரு முட்டை எடுக்கலாம்.
10 சதவீதம் புரதம் உடலின் எடைக்கு ஏற்ப, 10 சதவீதம் அளவுக்கு தினமும் புரதம் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இறைச்சி சாப்பிடுவோருக்கு, கூடுதல் புரதம் கிடைக்கும். உணவில், அறு சுவையும் அடிப்படையானது; அனைவருக்கும் தேவையானது.
உண்ணும் உணவில், அறுசுவையும் இருக்க வேண்டும். ஆனால், வயதுக்கு ஏற்ற அளவில் உண்ண வேண்டும். குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், இனிப்பு மற்றும் உப்பு குறைவாக எடுக்க வேண்டும். சர்க்கரை நோய் அச்சத்தால், சர்க்கரை எடுப்பது குறைந்துவிட்டது; ஆனால், உப்பு அளவு குறையவில்லை.
உலக சுகாதார நிறுவன அறிவுரைப்படி, தினமும் நான்கு கிராமிற்கு மிகாமல் உப்பு சேர்க்க வேண்டும்; ஆனால், தமிழகத்தில், எட்டு கிராம் வரை சேர்க்கிறோம். இருமடங்கு அதிகம் உப்பு எடுப்பதால், சர்க்கரை நோயாளிகளில், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் விரைவில் சிறுநீரக செயலிழப்பு ஆபத்து உருவாகிறது.
இனிப்பு, உப்பை குறைக்க வேண்டும்; கசப்பு மற்றும் துவர்ப்பு சுவையை அதிகமாக எடுக்க வேண்டும். புளிப்பு மற்றும் காரத்தை மிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். காரத்துக்கு மிளகுதான் பயன்படுத்தி வந்தோம்; வெளிநாட்டில் இருந்து மிளகாய் வந்த பிறகு மிளகை மறந்துவிட்டோம். காரத்துக்கு மிளகை பயன்படுத்த வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, ஒவ்வொரு வேளை உணவிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உணவு என்பது, மருத்துவ பயன்பாடு நிறைந்த உணவாக தேர்வு செய்ய வேண்டும். உற்சாகத்துக்காக தேனீராகவோ, உணவாகவோ இருக்க கூடாது. டீ என்ற பெயரில், வீடுகளில் தினமும் தேயிலை பால் பாயசம் குடிக்கின்றனர். தேநீரின் சத்துக்களை, பால் குறைத்து விடுகிறது

