/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு: உச்சம் தொட்டது மல்லிகை
/
வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு: உச்சம் தொட்டது மல்லிகை
வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு: உச்சம் தொட்டது மல்லிகை
வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு: உச்சம் தொட்டது மல்லிகை
ADDED : ஜன 15, 2024 12:21 AM
உடுமலை;உடுமலையில், பனிப்பொழிவால் உற்பத்தி பாதித்துள்ள நிலையில், பண்டிகை சீசனில் தேவை அதிகரித்து, பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது; மல்லிகை கிலோ 4 ஆயிரம் ரூபாய்க்கு நேற்று விற்பனையானது.
மதுரை, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உடுமலைக்கு நாள்தோறும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
மொத்த வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, பூ மாலை கட்டி, நகரம் மற்றும் கிராமப்புறங்களில், சிறு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
சுற்றுப்பகுதிகளில், பூ உற்பத்தி இல்லாத நிலையில், அனைத்து தேவைக்கும், பிற மாவட்ட வரத்தையே உடுமலை பகுதி நம்பியுள்ளது.
இதனால், பண்டிகை சீசனில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வது வழக்கமாகி விட்டது. இந்தாண்டு பருவம் தவறிய மழை மற்றும் அதிக பனிப்பொழிவு காரணமாக பிற மாவட்டங்களிலும், பூக்கள் உற்பத்தி பாதித்துள்ளது.
அதே வேளையில், மார்கழி மாத பூஜை, பொங்கல் திருவிழா என பண்டிகை சீசன் துவங்கியதால், வழக்கத்தை விட பூக்களின் தேவை அதிகரித்தது.
வரத்து குறைவால், பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து உடுமலையில் விற்பனையானது. அதிகபட்சமாக மல்லிகை பூ, கிலோ 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வந்தி மற்றும் பன்னீர் ரோஜா கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனையானது.
பனிப்பொழிவு குறையும் வரையில், பூக்கள் வரத்து சீராக வாய்ப்பில்லை என வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். உடுமலை பகுதியில், பூக்கள் சாகுபடி பரப்பை அதிகரித்தால் மட்டுமே பண்டிகை சீசனில், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், போகி பண்டிகையுடன் பொங்கல் விழா நேற்று துவங்கியது. பொங்கலை கொண்டாட கரும்பு, மஞ்சள் போன்றை வாங்க மக்கள் அதிகளவு கடைகளில் குவிந்தனர்.
பொள்ளாச்சியில், மல்லிகை கிலோ, 2,600 ரூபாய், முல்லைப்பூ, 1,500, அரளி, 300, சில்லி ரோஸ், 270, செவ்வந்தி, 170 - 200 ரூபாய், செண்டுமல்லி, 120, கோழிக்கொண்டை பூ, 150 ரூபாய்க்கு விற்கப்பட்டன.
பனிப்பொழிவால் பூக்கள் வரத்து குறைந்து காணப்பட்டதால் விலை உயர்ந்து இருந்தது. விலை உயர்வால் விற்பனை சுமாராக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து நெரிசல்
சத்திரம் வீதியில், கரும்பு, மஞ்சள், பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைகளில் மக்கள் குவிந்தனர். மேலும், அங்கு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு இருந்ததுடன், கார் உள்ளிட்ட வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, போலீசார், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.