ADDED : மார் 24, 2025 05:52 AM

திருப்பூர், பனியன் உற்பத்தி நகரான திருப்பூரில், மாசுக்கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாத முறைகேடு சாய ஆலைகள், பட்டன், ஜிப் டையிங் நிறுவனங்கள் ஆங்காங்கே இயங்குகின்றன. இந்நிறுவனங்களிலிருந்து திறந்துவிடப்படும் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுநீர் அவ்வப்போது நொய்யலாற்றில் கலந்து, ஆற்றை மாசுபடுத்திவருகிறது.
திருப்பூர் மாநகர பகுதி குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தினந்தோறும், ஆற்றில் பல்வேறு இடங்களில் கலந்துவருகிறது.
கோடை க்காலம் துவங்கியுள்ள நிலையில் தற்போது, நொய்யலாற்றில் சாக்கடை கழிவுநீர் மட்டுமே செல்கிறது. இதனால், ஆற்றில் ஆங்காங்கே தடுப்பணை பகுதிகளில், நுரை பொங்குகிறது. பூலாவாரி சுகுமார் நகர் அருகே சத்யா நகர் பகுதியில், கடந்த சில நாட்களாகவே, நொய்யலாற்றில், கடும் துர்நாற்றத்துடன் சாக்கடை கழிவுநீர், வெண்மையான நுரை பொங்க, சென்று கொண்டிருக்கிறது. நொய்யலை மீட்க போராடிவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு இது வேதனையை ஏற்படுத்துகிறது.
நொய்யலாற்றில் ஓடும் சாக்கடை கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றும்வகையில், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், ஆறு சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கும் பணியை மேற்கொண்டுவருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து, சாக்கடை கழிவுநீரை சுத்திகரித்து, நன்னீராக ஆற்றில் விடவேண்டும். ஆற்றையும், நிலத்தடி நீரையும் பாதுகாக்க வேண்டும்.