/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனத்துறை செக்போஸ்ட்டில் வசூல்; வனவர் தற்காலிக பணி நீக்கம்
/
வனத்துறை செக்போஸ்ட்டில் வசூல்; வனவர் தற்காலிக பணி நீக்கம்
வனத்துறை செக்போஸ்ட்டில் வசூல்; வனவர் தற்காலிக பணி நீக்கம்
வனத்துறை செக்போஸ்ட்டில் வசூல்; வனவர் தற்காலிக பணி நீக்கம்
ADDED : ஜூலை 02, 2025 09:45 PM

உடுமலை; உடுமலை - மூணாறு ரோட்டில், வனத்துறை சோதனை சாவடியில், முறைகேடாக வசூலில் ஈடுபட்ட வனவர் 'சஸ்பென்ட்' செய்யப்பட்டார்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியில், உடுமலையிலிருந்து கேரளா மாநிலம் மூணாறு செல்லும் ரோடு உள்ளது. சுற்றுலா வாகனங்கள், இரு மாநில மக்கள் என நுாற்றுக்கணக்கான வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரோட்டில், ஒன்பதாறு மற்றும் சின்னாறு பகுதியில், வனத்துறை செக்போஸ்ட் அமைந்துள்ளது. கடந்த, 2018 முதல் அரசு உத்தரவு அடிப்படையில், ரோட்டில் பயணிக்கும் வாகனங்களுக்கு, வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன், 'பாஸ்ட் டிராக்' முறையில், நேரடியாக நுழைவு கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், உடுமலை வனச்சரகம், ஒன்பதாறு செக்போஸ்ட்டில் பணியில் இருந்த வனவர் முத்துச்சாமி, சோதனைச்சாவடியை கடக்கும் வாகன ஓட்டுநர்களிடம், முறைகேடாக வாகனத்திற்கு ஏற்ப, ரூ.100 முதல், ரூ.500 வரை வசூல் செய்து வந்துள்ளார். பணம் இல்லை என்று கூறுபவர்களிடம், 'ஜி-பே' வாயிலாவும் வசூல் செய்துள்ளார்.
ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் கூறியதாவது:
சட்ட விரோதமாக வாகனங்களிடம் வனவர் வசூல் செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில், வனவர் முத்துச்சாமி, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எந்தனை மாதங்களாக, எவ்வளவு வசூல் செய்துள்ளார் என்பது குறித்து, வங்கிக்கணக்கு விபரங்கள் ஆய்வு செய்து, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இரண்டு செக்போஸ்ட்களிலும் முறைகேடுகளை தடுக்கும் வகையில், 'பாஸ்ட் டிராக்' முறையில், அரசு உத்தரவு அடிப்படையில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வனத்துறையினர் வசூலில் ஈடுபடுவது உள்ளிட்ட செக்போஸ்ட் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில், கேமரா பொருத்தப்பட்டு, மாவட்ட வன அலுவலகத்திலிருந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, தெரிவித்தார்.