/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காண்டூர் கால்வாய் பராமரிப்புக்கு வனத்துறை எதிர்ப்பு; நீர்வளத்துறை அதிகாரிகள் அதிருப்தி
/
காண்டூர் கால்வாய் பராமரிப்புக்கு வனத்துறை எதிர்ப்பு; நீர்வளத்துறை அதிகாரிகள் அதிருப்தி
காண்டூர் கால்வாய் பராமரிப்புக்கு வனத்துறை எதிர்ப்பு; நீர்வளத்துறை அதிகாரிகள் அதிருப்தி
காண்டூர் கால்வாய் பராமரிப்புக்கு வனத்துறை எதிர்ப்பு; நீர்வளத்துறை அதிகாரிகள் அதிருப்தி
ADDED : ஆக 11, 2025 08:44 PM
உடுமலை; பி.ஏ.பி., பாசன திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, திருமூர்த்தி அணைக்கு, காண்டூர் கால்வாய் வழியாக, நீர் கொண்டு வரப்பட்டு, பின் பாசனத்துக்கு வழங்கப்படுகிறது. திட்டத்தின் ஆதாரமாக உள்ள, காண்டூர் கால்வாய், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.
இக்கால்வாய் பராமரிப்பு பணி மேற்கொள்ள, வனத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருவதாக நீர் வளத்துறை அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
காண்டூர் கால்வாயின் நீர்வரத்து மட்டுமே, திருமூர்த்தி அணையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இதன் வாயிலாக, திருப்பூர், கோவை மாவட்டத்திலுள்ள, 3 லட்சத்து, 77 ஆயிரத்து, 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
காண்டூர் கால்வாய், திட்ட கட்டுமான பணி, 1960ல் துவங்கி, 1967ல் நிறைவு பெற்று, அன்று முதல் பயன்பாட்டில் உள்ளது. காண்டூர் கால்வாய் கி.மீ., 30.1 முதல், 49.3 வரையில், நவமலை -- திருமூர்த்தி அணை வரை, கால்வாய், கரையில் அமைந்துள்ள ஆய்வு பாதை, மலைப்பகுதியில் இரு இடங்களில் இணைப்பு ரோடுகள், நீர்வளத்துறை திருமூர்த்தி கோட்டம் சார்பில் பராமரிக்கப்படுகிறது.
நீர்வளத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில், கால்வாயில் சரிந்து விழுந்த மண் மற்றும் பெருங்கற்களை அகற்றுதல், கால்வாயின் உடைப்பு, சிறு சேதம் ஏற்பட்ட பகுதிகள் பழுது பார்த்தல், கரையில் செடி, கொடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் திட்டம் துவங்கிய காலம் முதல், தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு பராமரிப்பு பணிகளை நீர்வளத்துறை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், அப்பகுதியிலுள்ள வனத்துறை அலுவலர்கள் சிலர், பராமரிப்பு பணி மேற்கொள்வதை தடுத்து வருகின்றனர்.
இதனால், பணிகள் பாதித்து வருகிறது. பி.ஏ.பி., திட்டத்தின் ஆதாரமாக உள்ள காண்டூர் கால்வாய் பராமரிப்பது மிக முக்கியமான பணியாகும். கால்வாயின் கரையில், வளர்ந்துள்ள முட்புதர் மற்றும் செடிகளை அகற்றினால் மட்டுமே, கால்வாயின் கரைகளின் நிலை, நீர்க்கசிவு மற்றும் உடைப்புகளை கண்டறிந்து, உடனடியாக சரி செய்ய முடியும்.
இல்லையென்றால், கால்வாய் கரைகள் உடைப்பு ஏற்பட்டு அரசுக்கு பெரும் பொருட்சேதம் ஏற்படுவதோடு, பாசன பகுதிக்கு நீர் வினியோகிப்பதில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கால்வாய் கீழ்ப்பகுதியிலுள்ள கிராம மக்கள், விவசாயிகளுக்கு பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்படும்.
எனவே, காண்டூர் கால்வாயின் முக்கியத்துவம் கருதியும், அரசு மற்றும் பொதுமக்களின் சொத்து சேதமடையாமல் பாதுகாக்கவும், பி.ஏ.பி., பாசன பகுதிகளின் நீராதாரத்தை உறுதி செய்யவும், காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகளை, நீர்வளத்து துறை வாயிலாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், என வனச்சரக அலுவலர், மாவட்ட வன அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.