/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் உத்தரவு; வனத்துறை அலட்சியம்; விவசாயிகள் அதிருப்தி
/
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் உத்தரவு; வனத்துறை அலட்சியம்; விவசாயிகள் அதிருப்தி
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் உத்தரவு; வனத்துறை அலட்சியம்; விவசாயிகள் அதிருப்தி
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் உத்தரவு; வனத்துறை அலட்சியம்; விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜூலை 24, 2025 08:29 PM
உடுமலை; காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள, சிறப்பு குழுக்கள் அமைக்க அரசு உத்தரவிட்டும், வனத்துறையினர் மெத்தனம் காட்டுவதால், உடுமலை வட்டார விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் காட்டுப்பன்றிகளால், விளைநிலங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, மக்காச்சோளம், நிலக்கடலை, பீட்ரூட், வாழை உள்ளிட்ட சாகுபடிகளை மேற்கொள்ளவே விவசாயிகள் தயங்கும் நிலை உள்ளது. மேலும், இளம் தென்னங்கன்றுகளையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது.
தமிழகம் முழுவதும் இப்பிரச்னையால் பாதிப்புகள் அதிகரிக்கவே, கடந்த ஜன., மாதம், காப்புக்காடுகளில் இருந்து 3 கி.மீ., தொலைவை தாண்டி வந்தால், வனத்துறையினர் சுடலாம் என அரசு அறிவித்தது.
மேலும், இந்த உத்தரவின் வழிகாட்டுதல்படி, வனவர், வி.ஏ.ஓ., மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு கிராமங்களில் உருவாக்க வேண்டும்; அடுத்தகட்டமாக, வட்டார, மாவட்ட குழு அமைத்து பணிகளை துவக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருப்பூர் வனக்கோட்டத்தின் கீழ், இப்பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனம் விரைவில் துவங்க உள்ளது. இந்த சீசனில், பல ஆயிரம் ஏக்கரில், மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட சாகுபடிகளை மேற்கொள்வது வழக்கம். ஆடிப்பட்டத்தில், மானாவாரியாகவும் பல்வேறு சாகுபடி விதைப்பு மேற்கொள்ளப்படும்.
ஆனால், காட்டுப்பன்றிகளால், விதைப்பு, நடவு செய்யவே தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று வட்டாரங்களிலும், பல ஆயிரம் காட்டுப்பன்றிகளால் பரவலாக, பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
அவற்றை கட்டுப்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டும், அதற்கான பணிகள் எதுவும் திருப்பூர் மாவட்ட வனத்துறையினரால் மேற்கொள்ளப்படவில்லை. மனிதர்களை காட்டுப்பன்றிகள் தாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. அரசு உத்தரவிட்டும், அலட்சியத்தை கைவிடாத வனத்துறையை கண்டித்து மீண்டும் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.