/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இலவச தொழில்நுட்ப பயிற்சி ஒரு வரப்பிரசாதம்'
/
'இலவச தொழில்நுட்ப பயிற்சி ஒரு வரப்பிரசாதம்'
ADDED : ஜன 06, 2024 11:11 PM

திருப்பூர்;''பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, இலவச தொழிற்நுட்ப பயிற்சி கிடைப்பது ஒரு வரப்பிரசாதம்,'' என, கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசினார்.
'ரிவைவிங் கிரீன் ரெவலுாஷன்(RGR)செல், டாடா அறக்கட்டளையின் தொடர்புடைய தொண்டு நிறுவனம், 'இன்டர்டெக்' நிறுவன உதவியுடன், இலவச ஜவுளி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் மையம், திருப்பூரில் இயங்கி வருகிறது.
மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ஐந்தாவது பட்டமளிப்பு விழா திருப்பூரில் நடந்தது. ஜவுளி சோதனை மற்றும் தர உத்தரவாதத் துறையில் உள்ள திறன் இடைவெளியைக் குறைக்கும் வகையில், ஆர்.ஜி.ஆர்., செல், திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜவுளி 'லேப் டெக்னீஷியன்' மற்றும் 'மெர்சன்டைசிங்' பயிற்சி, 2022 ஜூலை முதல் அளிக்கப்பட்டது.
பயிற்சி நிறைவு செய்த, 68 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''இன்றைய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
இன்றைய இளம் தலைமுறையினர் இத்தகைய மையங்களில் பயின்று, தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சுயதொழில் செய்து தொழில்முனைவோர்களாகவும் உருவாக வேண்டும்,'' என்றார்.
முன்னதாக, 'இன்டர்டெக்' நிறுவனத்தின் தணிக்கை தலைவர் சாந்தகுமார் வரவேற்றார். மனிதவள மேம்பாட்டு தலைவர் இம்ரான்கான், பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
விருப்பமுள்ள மாணவர்கள், தாங்களும் பயிற்சி பெற்று, சிறந்த ஜவுளித் துறை சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறலாம்.
விவரங்களுக்கு, 98421 88608, 80151 68367 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, பயிற்சி மையத்தினர் தெரிவித்துஉள்ளனர்.