/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதுப்புனல் பாயும்; பயிர்கள் செழிக்கும் இன்று ஆடிப்பெருக்கு கோலாகலம்
/
புதுப்புனல் பாயும்; பயிர்கள் செழிக்கும் இன்று ஆடிப்பெருக்கு கோலாகலம்
புதுப்புனல் பாயும்; பயிர்கள் செழிக்கும் இன்று ஆடிப்பெருக்கு கோலாகலம்
புதுப்புனல் பாயும்; பயிர்கள் செழிக்கும் இன்று ஆடிப்பெருக்கு கோலாகலம்
ADDED : ஆக 02, 2025 11:21 PM

வேளாண் பண்பாட்டின் அடையாளம் ஆடிப்பெருக்கு; கோடையில் வறண்ட காற்று வெம்மையுடன் வீசும்; ஆறு, குளம், குட்டைகள் அனைத்தும் காய்ந்து, வறண்டு போயிருக்கும்; விளை நிலங்கள், மழைத்துளிக்காக வானம் பார்த்து காத்திருக்கும்; ஆடி மாதம் பிறக்கும் போது, புது மழை பெய்து, ஆறு, ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் புது வெள்ளம் பாயும்; இந்த நீர், விளை நிலங்களில் புதிய விளைச்சலுக்கு ஏதுவாக இருக்கும் என்பதால், அந்நீருக்கு நன்றி சொல்லி, வணங்கி, விதைப்பை துவக்குவர் விவசாயிகள்.விவசாயிகளுக்கான அந்த நன்னாள் தான் ஆடிப்பெருக்கு. இந்த நாளில் துவங்கும் செயல் எதுவெனினும் பல்கிப்பெருகும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.
தொழில் நகரமாக திருப்பூர் இருந்தாலும், பசுமையும், குளிர்ச்சியும் நிறைந்த கிராமங்களை எல்லையாக கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் நெல் சாகுபடியில் கூட, விவசாயிகள் அதிகம் ஈடுபடுகின்றனர். தென்னை, பருத்தி, சோளம், காய்கறி, பயறு வகை சாகுபடியும் நடக்கிறது. தமிழரின் பாரம்பரியத்துடன் பின்னி பிணைந்த ஆடிப்பெருக்கில், ஆடிப்பட்டம் தேடி விதைக்க தயாராகியிருக்கின்றனர் விவசாயிகள்.------
நதியை ரசியுங்கள்... நல்லன அறியுங்கள்
கோவை சதாசிவம், சுற்றுச்சூழல் எழுத்தாளர்:'நடந்தாய் வாழி காவேரி' என்ற பாடலுக்கு பொருள் சேர்க்கும் விழா தான் ஆடிப்பெருக்கு. நதிக்கரை நாகரிகத்தின் முதன்மை பண்டிகையாக, தமிழர்களால் நெடுங்காலம் கொண்டாடப்படுகிறது. இதை புறநானுாறு, சிலப்பதிகார பாடல் வரிகள் தெளிவுபடுத்துகின்றன. ஆடிப்பெருக்குக்கு முந்தைய கோடைக்காலத்தில் ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் காய்ந்து, வறண்டு போயிருக்கும். இரு மாத காலம் அவை வறண்டு போக வேண்டும் என்பது, இயற்கையின் நியதி.அந்த நீர் நிலைகளில் வாழ்ந்த மீன், தவளை உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்கள், சேற்றில் முட்டையிட்டு மறைந்து போகும். சேறு காய்ந்து, அந்த முட்டைகள் பாதுகாக்கப்படும். ஆடி மாதம், புது வெள்ளம் வருவதற்கு முன், அந்த முட்டைகள் வெடித்து, புழுக்களாக மாறும். அவற்றுக்கு தேவையான உணவு, அடித்து வரப்படும் புது வெள்ளத்தில் இருந்து கிடைக்கும். அடுத்த, 3 நாளில் தலைப்பிரட்டை, மீன் குஞ்சுகளை அங்கு பார்க்க முடியும். எனவே, ஒரு ஆறு உயிர்ச்சூழலை உருவாக்கிக் கொடுக்கிறது. நன்னீர் ஓடும் ஆற்றில் தான் இவை சாத்தியம் என்ற நிலையில், ஆற்றில் குப்பை, சாயநீர், கழிவு கொட்டி மாசுபடுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். இளம் தலைமுறையினரை, வாழ்வில் ஒரு முறையாவது தலைக்காவிரி துவங்கி, பூம்புகார் வரை நதியோரம் அழைத்து செல்ல வேண்டும்; காவிரியைக் காட்ட வேண்டும்; நீர் வாழ் உயிரினங்களை அறியச் செய்ய வேண்டும்.------
'என் மண்... என் நதி'மணிவண்ணன், எழுத்தாளர்:ஆடிப்பெருக்கு சமயத்தில் நீரை வணங்குவது தமிழர் மரபு; பண்பாடு. மனித நாகரிகமே, ஆற்றங்கரையில் தான் உருவானது. யானைகளின் வலசை நிறைந்த மிருதுவான மண்ணும், மணலும் படிந்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் யானைகள், தன் தும்பிக்கையால், ஊன்றி, உறிஞ்சியதால் உருவானது தான் நொய்யல் நதியின் துவக்கம் என்பார்கள். நதிகளை பாதுகாப்பதும், மாசு இல்லாத நல்ல நீரை, அடுத்த தலைமுறைக்கு கொடுத்து செல்வதும் ஒவ்வொருவரின் கடமை. 'என் மண், என் நதி' என இயற்கையின் மீதான பற்று, மரியாதையை அதிகமாக வளர்த்து, இயற்கை வளங்களை பாதுகாக்க தயாராவதும், அதை அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதற்குமான உறுதியை, இந்நாளில் ஏற்க வேண்டும்.----------வேலைவாய்ப்பு பெருகும்வேலுசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம்:தற்போதைய சூழலில் மண்ணும், நீரும் மாசுபட்டுள்ள நிலையில், இயற்கை வழி விவசாயம், காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது. பிறக்கும் குழந்தையின் மரபணுவில் கூட பாலிதின் நுண்துகள் கலந்திருப்பதாக ஆய்வுகள் கூறும் நிலையில், நோயின்றி வாழ, இயற்கை வழி வேளாண்மை வாயிலாக உற்பத்தி செய்யப்படும் காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை உண்ண வேண்டும் என்ற விழிப்புணர்வு, விவசாயிகள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அந்தந்த மண் மற்றும் நீருக்குரிய விதைப்பில் இயற்கை விவசாயிகள் கவனம் செலுத்துகின்றனர். இயற்கை வழி வேளாண்மை வாயிலாக தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.---தலைமுறையை காக்கும் பொறுப்புசுந்தர்ராஜன், செயலாளர், வனம் பவுண்டேஷன்:நமக்கெல்லாம் வாழ்வளிக்கும் அனைத்து நதிகளின் ஆதாரமாக, மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, கிழக்கு நோக்கி பாய்ந்து ஓடும் ஆறுகள் உள்ளன. தென்மேற்கு பருவமழையால் பெருக்கெடுத்து ஓடுவதை ஆடிப்பெருக்காக கொண்டாடுகிறோம். இயற்கையை போற்றுவது, தமிழர் மரபு. கால மாற்றத்தால் இன்றைய தொழில்நுட்ப உலகில், இயற்கையை போற்றி பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்க வேண்டிய பொறுப்பு நமக்குண்டு. இந்த ஆடிப்பட்டத்தில் பூமித்தாயை காக்கும் நோக்கில், ஒவ்வொருவரும் குறைந்தது, 5 மரக்கன்றுகள் நட்டு, அதை 2 ஆண்டுகள் வளர்த்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டும். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கும் வகையில், உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவக்கி செயல்படுத்தி வருகிறோம்.---
பசுமை கொஞ்சும் விளைநிலத்தைக் கண்ணுற்றாலே மனதில் இனிமை பிறக்கும்.
இடம்: அவிநாசி, ராவுத்தாம்பாளையம்