ADDED : பிப் 22, 2024 05:39 AM
திருப்பூர்: மனைவி குறித்து அவதுாறாக பேசிய நண்பரை கொலை செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த நபர், கோர்ட்டில் சரணடைந்தார். மங்கலத்தை சேர்ந்த அசோக்குமார், 28, நஹீம், 33, ஆல்வின், 30, வினோத், 33, அருண், 28 ஆகிய, ஐந்து பேரும் நண்பர்கள்.
கடந்த 18ம் தேதி அருண், தனது தங்கை திருமணத்தையொட்டி நண்பர்களுக்கு மது விருந்து அளித்தார். காந்தி நகரில் உள்ள ஆல்வின் உறவினர் வீட்டில் மது அருந்த முடிவு செய்தனர். அன்றிரவு, அருணை தவிர மற்ற, நான்கு பேரும் மது அருந்தினர்.
மறுநாள் அதிகாலை, அருணும், வினோத்தும் வீட்டுக்கு கிளம்பி சென்ற நிலையில் மற்ற, மூன்று பேரும் மட்டுமே இருந்தனர். ஆல்வினும் துாங்க சென்றார். அப்போது, அசோக்குமாரும், நஹீமும் பேசி கொண்டிருந்தனர். அதில் நஹீமின் மனைவி குறித்து அவதுாறாக பேசியது தொடர்பாக, இருவருக்கும் இடையே பிரச்னை எழுந்தது. கடப்பாரை உள்ளிட்ட பொருட்களால் அசோக்குமாரை தாக்கி, கொலை செய்து தப்பி சென்றார்.
அனுப்பர்பாளையம் போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து, நண்பர்களிடம் விசாரித்தனர். தலைமறைவான நஹீமை தேடி வந்த நிலையில், நேற்று ஜே.எம்-3 கோர்ட்டில் சரணடைந்தார். அவரை, 15 நாள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.