ADDED : ஜூலை 15, 2025 09:34 PM
உடுமலை; ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ், நுாறு சதவீத மானியத்தில், காய்கறி மற்றும் பழச்செடி தொகுப்புகள் வாங்க இணையதளத்தில் பதிவு செய்யுமாறு, உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழக அரசு ஊட்டசத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ், மக்கள் மற்றும் விவசாயிகள், வீட்டுத் தோட்டம் அமைத்து நஞ்சில்லா உணவை, தாங்களே உற்பத்தி செய்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய மானிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலாமணி கூறியிருப்பதாவது:
பொதுமக்கள், நுாறு சதவீத மானியத்தில், காய்கறி விதைகள் மற்றும் பழச்செடி தொகுப்புகள் பெற அரசு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில், பயன்பெற உடுமலை வட்டார மக்கள் மற்றும் விவசாயிகள், https://tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையதளத்தில், ஆதார் நகலை கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களான ராவணாபுரம், தேவனூர்புதூர், சின்ன பாப்பனூத்து, பெரிய பாப்பானூத்து, போடிபட்டி, பெரியகோட்டை, ராகல்பாவி மற்றும் மானுப்பட்டி கிராமங்களில் வசிப்போர் மட்டும் ஐந்து வகை பழச்செடி தொகுப்பினை பெற பதிவு செய்யலாம்.
மேலும், விபரங்களுக்கு, 9524727052, 8883610449, 9585424502 ஆகிய மொபைல்போன் எண்களில், தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.