/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி சர்க்கரை ஆலையை புதுப்பிக்க நிதி; முதல்வரிடம் மனு அளிக்க திட்டம்
/
அமராவதி சர்க்கரை ஆலையை புதுப்பிக்க நிதி; முதல்வரிடம் மனு அளிக்க திட்டம்
அமராவதி சர்க்கரை ஆலையை புதுப்பிக்க நிதி; முதல்வரிடம் மனு அளிக்க திட்டம்
அமராவதி சர்க்கரை ஆலையை புதுப்பிக்க நிதி; முதல்வரிடம் மனு அளிக்க திட்டம்
ADDED : ஜூலை 20, 2025 10:30 PM
உடுமலை; அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பிக்க நிதி ஒதுக்க வேண்டும், என கரும்பு பயிரிடுவோர் சங்கம் வலியுறுத்தி உடுமலை வரும் தமிழக முதல்வரிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
மடத்துக்குளம், கிருஷ்ணாபுரத்தில், தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையாக, 1960ல் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை துவக்கப்பட்டது.
திருப்பூர், திண்டுக்கல், கோவை மாவட்டத்திலுள்ள, 22 ஆயிரம் கரும்பு விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர். தினமும், 2 ஆயிரம் டன் கரும்பு உற்பத்தி, சராசரியாக, 11 சதவீதம் கரும்பு கட்டுமானம் என சிறப்பாக இயங்கி வந்ததோடு, கரும்பு விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது.
பழமையான ஆலையிலுள்ள இயந்திரங்கள் தேய்மானம், பழுது உள்ளதோடு, அடிக்கடி பழுது ஏற்பட்டு கரும்பு அரவை, சர்க்கரை உற்பத்தி பாதித்தது. தொடர்ந்து, இடு பொருட்கள், தொழிலாளர் கூலி என சாகுபடி செலவினங்கள் அதிகரித்த நிலையில், ஆலை உற்பத்தி சரிவு காரணமாக விவசாயிகள், தொழிலாளர்கள் பாதித்து வருகின்றனர்.
ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில், இயந்திரங்கள் பழுதானதால், கடந்த, 2023 முதல் ஆலை இயங்காமல் மூடப்பட்டுள்ளது.
ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்கவும், ஆறு ஆண்டுகளில் அத்தொகையை அரசுக்கு திரும்ப செலுத்தும் வகையில் திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பிய நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகள் பல முறை ஆய்வு செய்தும், இதுவரை நிதி ஒதுக்கவில்லை.
ஆலை அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளதால், சாகுபடி செய்யப்படும் கரும்பை பதிவு செய்ய முடியாமலும், குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலையும் உள்ளது.
மேலும், சர்க்கரை ஆலையின் துணை ஆலையாக, கடந்த 1995 ம் ஆண்டு நிறுவப்பட்ட எரிசாராய ஆலையும், 30 ஆண்டு பழமையான இயந்திரங்கள், உபகரணங்கள் பழுது மற்றும் மூலப்பொருளான கழிவு பாகு கிடைக்காமல் வீணாக உள்ளது.
எனவே, பாரம்பரியம்மிக்க இரு ஆலைகளையும் புனரமைக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் சார்பில், வரும் 23ம் தேதி, உடுமலைக்கு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.