UPDATED : செப் 16, 2026 08:30 PM
ADDED : செப் 16, 2026 08:21 PM

பல்லடம்:பல்லடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடந்தது. பொதுக்கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளர் சர்வேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சண்முகம், நிர்வாகக் குழு உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
இயக்குனர் பேரரசு பேசுகையில், ''விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு தடைகளைக் கடந்து ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு பெரிய கட்டுப்பாடுகள் இன்றி விழா அமைதியாக நடந்துள்ளது. முதல்வர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. முதல்வர் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் என்பதால், விநாயகர் சதுர்த்தி மட்டுமின்றி ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட அனைத்து மதப் பண்டிகைகளுக்கும் சமமாக வாழ்த்து தெரிவிக்க வேண்டும். ஒரு மதத்தை உயர்த்திப் பேசுவதும், மற்றொரு மதத்தை தாழ்வாகப் பேசுவதும் கூடாது'' என்றார்.
முன்னதாக, 25-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் என்.ஜி.ஆர். ரோட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோவை--திருச்சி ரோடு வழியாக சாமளாபுரம் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
.
