/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆங்கிலேய அதிகாரியை காப்பாற்றிய ஆபத்து காத்த விநாயகர்
/
ஆங்கிலேய அதிகாரியை காப்பாற்றிய ஆபத்து காத்த விநாயகர்
ஆங்கிலேய அதிகாரியை காப்பாற்றிய ஆபத்து காத்த விநாயகர்
ஆங்கிலேய அதிகாரியை காப்பாற்றிய ஆபத்து காத்த விநாயகர்
ADDED : செப் 06, 2024 03:17 AM

விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் என எல்லாமாய் விளங்குகிறார். எந்த காரியத்தை துவங்கும் முன், விநாயகரை வணங்காமல் துவங்கமாட்டார்கள். இவர் ஞானத்துக்கு மட்டும் அல்லாமல், பல வீர தீர செயல்களுக்கு பெயர் போனவர் என்று, அவரை சரணடைந்த யாரையும் கைவிடுவதில்லை என்பதும் உண்மை.
அவ்வகையில், அவிநாசி அருகே பழங்கரையில் உள்ள ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து சென்ற ஆங்கிலேயரை காப்பாற்றினார் அங்குள்ள விநாயகர். இதன் காரணமாகவே, அவர், ஆபத்து காத்த விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.
பழங்கரை பொன் சோளீஸ்வரர் கோவிலின் மேற்கில் அக்கினி மா நதி என்ற ஆறு இருந்துள்ளது. இதன் மேற்கு புறமாக கரையில் ஆபத்துக் காத்த விநாயகர் அமர்ந்துள்ளார். வீற்றிருக்கும் விநாயகர், மழை வெள்ளம் ஏற்பட்ட காலங்களில் பழங்கரையை காப்பாற்றி வந்ததாலேயே இந்த பெயர் வழங்க பெற்றது என்றும் மக்கள் கூறுகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அதிகாரி ஒருவர் ஊர் நிர்வாகத்தின் பொருட்டு இங்கு தங்கியிருந்தார். அப்போது, பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில், அதிகாரி தங்கியிருந்த கூடாரங்களை வெள்ளம் அடித்துச் செல்லாமல் காக்கவும் ஆற்றைக் கடக்கவும் விநாயகரை வேண்டி வழிபட்டார்.
அவ்வாறே நடந்ததால், வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த அந்த அதிகாரி விநாயகருக்கு ஆபத்துக் காத்த விநாயகர் என பெயர் சூட்டினார். அதுமட்டும் இல்லாமல் அன்று முதல் இந்த விநாயகர் கோவில் பூஜை செலவிற்காக நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டு (உத்தரவு எண்: 3136 ஆ.க.எண்.1625/25.11.1899) உள்ளார்.
அந்த உத்தரவின்படி இன்றும் நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் மட்டுமே இந்த விநாயகரின் பூஜை செலவுகளுக்காக வழங்கப்படுகிறது. தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப பூஜை செலவினங்களுக்கும், குருக்களுக்கும் உதவி தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் விருப்பம்.