ADDED : டிச 23, 2024 11:39 PM
திருப்பூர்,; திருப்பூர், குமரன் ரோட்டில் வடக்கு தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில் மாவட்ட சிறை அமைந்துள்ளது. சிறையில், தற்போது, 126 கைதிகள் உள்ளனர். அன்றாடம், காலை, மாலை கைதிகளிடம் வருகைப்பதிவு எடுப்பது வழக்கம். கடந்த 21ம் தேதி மாலை கைதிகளுக்கான வருகை பதிவு பார்க்கும் போது, ஒருவர் குறைவாக இருந்தது. மாயமான நபர், ஹிந்து முன்னணி நிர்வாகியிடம் நகை பறிப்பு வழக்கில் தொடர்புடைய சூர்யா, 24 என்பது தெரிந்தது.
சுற்றிலும் பெரிய மதில் சுவர்கள் இருந்தும், அவர் எப்படி தப்பினார் எனத் தெரியாமல் பணியில் இருந்த உதவி சிறை அலுவலர், போலீசார் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பூர் வடக்கு போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் சென்று விசாரித்தனர். சிறை வளாகத்தில், ஒரு பகுதியில் இருந்த இரும்பு வளை வழியே தப்பி சென்றது தெரிந்தது.
கோவை மத்திய சிறை எஸ்.பி., செந்தில்குமார் திருப்பூர் மாவட்ட சிறையில் ஆய்வு மேற்கொண்டு கைதி தப்பியது குறித்து விசாரித்து, முதல்கட்டமாக பணியில் அலட்சியமாக இருந்த, ஐந்து பேரை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.
கண்காணிப்பு இருந்தும்...
பிரதான ரோட்டில், மக்கள் நடமாட்டம், வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சிறையில் இருந்து கைதி தப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிறை நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் பணியில் இருப்பது, 'சிசிடிவி' கேமரா என அனைத்து விதமான கண்காணிப்பு கெடுபிடியை தாண்டி கைதி தப்பியது, பணியில் இருந்தவர்களின் அலட்சியத்தை காட்டுகிறது. கூடுதல் கண்காணிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீசார் கூறுகையில், ''கைதி தப்பிய புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். தப்பிய நபர் கடந்த, ஒரு மாதமாக சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு காலில் அடிபட்டுள்ள காரணத்தால், அவரால் எளிதாக தப்ப முடியாது. அன்றைய தினம் மாதாந்திர மின்தடையும் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற அனைத்தையும் தெரிந்து வைத்து, இரும்பு வளை வழியே தப்பித்து இருக்க வேண்டும். மற்ற எந்த இடத்திலும் தப்பித்து செல்வதற்கான வழிதடம், அறிகுறிகள் தென்படவில்லை'' என்றனர்.