UPDATED : நவ 23, 2026 08:45 PM
ADDED : நவ 23, 2026 08:42 PM
பொங்கலுார்: கொடுவாய் பகுதி வளர்ச்சியடைந்து வரும் நிலையில், குப்பைகளின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றை முறையாகக் கையாள போதிய கட்டமைப்பு இல்லாததால், ஊராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
குப்பைகளை அறிவியல் முறையில் தரம் பிரித்து அகற்றுவதற்கான வசதிகள் இல்லாததால், துப்புரவுப் பணியாளர்கள் வேறு வழியின்றி அவற்றுக்குத் தீ வைத்து எரிக்கின்றனர். குப்பைகளில் அதிகளவில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் எரியும்போது வெளியாகும் நச்சுப்புகை, பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், ‘குடியிருப்புகளுக்கு மத்தியில் குப்பைகளைக் குவித்து தீ வைப்பதால், புகையைச் சுவாசித்து நோயாளிகளாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இப்பிரச்னையில் சிறப்பு கவனம் செலுத்தி, குப்பைகளை அறிவியல் முறையில் அகற்றுவதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கொடுவாயை குப்பையில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
