UPDATED : அக் 15, 2026 09:24 PM
ADDED : அக் 15, 2026 09:20 PM

திருப்பூர்: ‘‘பொது இடங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, ஏ.ஐ., தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், நான்கு மண்டலங்களிலும் 24 மணி நேர கண்காணிப்புக் குழுக்கள் செயல்படுகின்றன’’ என, மாநகராட்சி கமிஷனர் அமித் தெரிவித்தார்.
மாநகராட்சி 50வது வார்டு, சங்கரன் வீதியில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதாக வந்த தகவலையடுத்து, நேரில் ஆய்வு செய்த கமிஷனர், அவற்றை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.
அவர் கூறியதாவது:
மாநகராட்சியில் வீடுகள், நிறுவனங்களில் இருந்து குப்பைகள் தரம் பிரித்துச் சேகரிக்கப்படுகின்றன. முக்கிய இடங்களில் ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தப்பட்டு, பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் கண்காணிக்கப்படுகின்றனர். விதிமீறுவோர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
நான்கு மண்டலங்களிலும் 24 மணி நேர கண்காணிப்புக் குழுக்கள் செயல்படுகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள், இறைச்சி, ஈரக்கழிவுகள், மின்னணு, மருத்துவம், பிளாஸ்டிக் கழிவுகள் தனித்தனியாகச் சேகரிக்கப்படுகின்றன. அதிக அளவில் கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் அவற்றை அகற்ற வேண்டும். திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்து வாரந்தோறும் ஆய்வு நடத்தப்படுகிறது.
பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் ஒத்துழைத்தால், குப்பையற்ற மாநகராட்சியை உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
