/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விமானப்படை தளம் அருகே குப்பைகள் கொட்ட தடை
/
விமானப்படை தளம் அருகே குப்பைகள் கொட்ட தடை
ADDED : ஜூலை 31, 2025 07:14 AM

திருப்பூர்; பல்லடம் அடுத்த இச்சிப்பட்டியில் விமான சட்ட விதிமுறைப்படி குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில், தினமும் 700 முதல், 800 டன் குப்பைகள் சேகரமாகின்றன. குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாததால், பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி ஊராட்சி பகுதியில், மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டியது. அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவை மாவட்டம், சூலுார் விமானப்படை தளம் இப்பகுதியில் இருந்து, மூன்று முதல் நான்கு கி.மீ., தொலைவில் உள்ளது. விமான சட்டம், 1937, விதி, 91ன் படி, 'சூலுார் தளத்தில் இருந்து, 10 கி.மீ., சுற்றளவுக்குள், எந்தவொரு நபரும் திறந்தவெளியில் எந்த விலங்கையும் கொல்லக் கூடாது. ஓட்டல்கள், இறைச்சிக் கடைகள், மீன் கடைகள், எலும்பு பதப்படுத்துதல், ஆலைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட, கழுகுகள் மற்றும் பிற பறவைகள் மற்றும் விலங்குகளை ஈர்க்கும் வகையிலான குப்பைகளை கொட்டக்கூடாது. மீறி குப்பை கொட்டினால் கைது நடவடிக்கை, அபராதம் மற்றும் சிறைதண்டனை விதிக்கப்படும்' என்பது விதிமுறையாக உள்ளது.
விமானப்படை அதிகாரிகள் குப்பை கொட்டப்படும் இடத்தை பார்வையிட்டு, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசி சென்றனர்.பல்லடம் தாசில்தார் சபரி கூறுகையில், ''திருப்பூர் கலெக்டர் கவனத்திற்கு, இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவர் மூலமாக இச்சிப்பட்டி பகுதியில் குப்பை கொட்டப்படாது என்ற உறுதிமொழி வழங்கப்பட உள்ளது,'' என்றார்.

