குப்பைக்கு வைக்கப்பட்ட தீ; டெலிபோன் கம்பம் எரிந்தது
குப்பைக்கு வைக்கப்பட்ட தீ; டெலிபோன் கம்பம் எரிந்தது
ADDED : மார் 16, 2026 07:23 AM

திருப்பூர்: பேப்ரிகேஷன் ரோட்டில் குப்பைக்கு வைத்த தீயில் அருகே இருந்த டெலிபோன் கேபிள் கம்பம் தீப்பிடித்து எரிந்தது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் கொட்டிக் குவிக்கப்படும் குப்பை கழிவுகள் தீ வைத்து கொளுத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது.
வீடு மற்றும் நிறுவனங்களில் சேகரிக்கும் குப்பை கழிவுகளை பெற்றுச் செல்லும் துாய்மைப்பணியாளர்கள் ஆங்காங்கே கேட்பாரற்ற இடங்களில் கொட்டி வைப்பதும், பின்னர் அவற்றில் தீ வைத்து விடுவதும் அடிக்கடி நடக்கிறது.
நகரின் பிரதான பகுதியாக உள்ள பேப்ரிகேஷன் ரோட்டில் சில இடங்களில் குப்பை கழிவுகள் அதிகளவில் கொட்டி வைக்கப்பட்டுக் கிடக்கிறது. இதில் நேற்று காலை யாரோ தீயைப் பற்ற வைத்துச் சென்று விட்டனர்.
பரந்து குவிந்து கிடந்த குப்பை கழிவுகளில் பற்றிய தீ மளமளவென எரிந்தது. சில நிமிடங்களில் அங்கு பரவிய தீ, அருகே இருந்த டெலிபோன் கேபிள் கம்பத்திலும் அதில் இணைத்திருந்த பல்வேறு கேபிள்களிலும் பற்றிஎரியத் துவங்கியது.
இந்த தீயில் கம்பம் முற்றிலும் எரிந்து நாசமானது. கம்பத்திலும், அதன் இரு புறங்களிலும் இணைத்திருந்த கேபிள்களும் எரிந்தது.
இதனால் கடுமையான புகை அங்கு பரவியது. அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
