/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடுகளின் குப்பை; நீர்நிலைகளில் வீச்சு! மாயமாகும் பள்ளம்; மாவட்ட நிர்வாகம் மவுனம்
/
வீடுகளின் குப்பை; நீர்நிலைகளில் வீச்சு! மாயமாகும் பள்ளம்; மாவட்ட நிர்வாகம் மவுனம்
வீடுகளின் குப்பை; நீர்நிலைகளில் வீச்சு! மாயமாகும் பள்ளம்; மாவட்ட நிர்வாகம் மவுனம்
வீடுகளின் குப்பை; நீர்நிலைகளில் வீச்சு! மாயமாகும் பள்ளம்; மாவட்ட நிர்வாகம் மவுனம்
ADDED : ஜூலை 06, 2025 11:14 PM

உடுமலை; பிரதான நீர்வழித்தடமான ராஜவாய்க்கால் பள்ளம், குப்பை கிடங்காக மாற்றப்பட்டு, நீரோட்டம் முற்றிலுமாக தடைபட்டுள்ளது; நீராதாரத்தை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட ஒட்டுக்குளம் நிரம்பி, உபரி நீர் ராஜவாய்க்கால் பள்ளத்தில் வெளியேறும்.
சுண்டக்காம்பாளையம் அருகே துவங்கும் இந்த பள்ளம், நகரின் அருகிலுள்ள முக்கிய நீராதாரமாக இருந்தது. பள்ளத்தில் செல்லும் தண்ணீர், உப்பாறு ஓடையுடன் கலக்கிறது.
இந்த நீராதாரத்தின் முக்கியத்துவம் கருதி, 'ராஜவாய்க்கால்' என பெயரிட்டு, முன்பு பராமரித்து வந்தனர். தற்போது, இந்த பள்ளத்தை பார்த்தால் பரிதாப நிலையில், காணப்படுகிறது. குறிப்பாக, நகர எல்லையில், மின்மயானம் அருகே, இந்த நீர்நிலை குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. பருவமழை காலத்தில் வரும் நீரோட்டமும் தடைபடும் அளவுக்கு, குப்பை கொட்டப்பட்டுள்ளது.
அனைத்து வகை கழிவுகளும் கொட்டப்படுவதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி, நகருக்குள் வருபவரை திணறடிக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த நீராதாரம் முற்றிலுமாக காணாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, நீர்நிலையை பாதுகாக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்பே, அதை குப்பை கிடங்காக மாற்றிய அவலம் உடுமலையில் நடந்து வருகிறது.
உடுமலை ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் அனைத்தும், நகரை கடந்து, மின்மயானம் அருகே, ராஜவாய்க்கால் பள்ளத்தில் கொட்டப்படுகிறது.
அந்த ஊராட்சியில், அதிகரித்துள்ள குடியிருப்பு மற்றும் மக்கள் தொகைக்கேற்ப சுகாதார கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது.
இதனால், ஒரு நீர்நிலை குப்பை கிடங்காக மாறி மாயமாகி வருகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் இப்பிரச்னையை கண்டுகொள்ளவில்லை.