/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை விவகாரம் உக்கிரம்! கட்டமைப்பு இருந்தும் மாநகராட்சி அலட்சியம்; கைகொடுக்கவில்லை 'காலம் கடந்த ஞானம்'
/
குப்பை விவகாரம் உக்கிரம்! கட்டமைப்பு இருந்தும் மாநகராட்சி அலட்சியம்; கைகொடுக்கவில்லை 'காலம் கடந்த ஞானம்'
குப்பை விவகாரம் உக்கிரம்! கட்டமைப்பு இருந்தும் மாநகராட்சி அலட்சியம்; கைகொடுக்கவில்லை 'காலம் கடந்த ஞானம்'
குப்பை விவகாரம் உக்கிரம்! கட்டமைப்பு இருந்தும் மாநகராட்சி அலட்சியம்; கைகொடுக்கவில்லை 'காலம் கடந்த ஞானம்'
ADDED : ஜூலை 30, 2025 10:19 PM

திருப்பூர்; பதினைந்து வார்டுகளுக்கு ஒரு குப்பை தரம் பிரிக்கும் கூடம்; இரண்டு வார்டுகளுக்கு ஒரு நுண்ணுயிர்த் தயாரிப்புக்கூடம் உள்ளிட்ட கட்டமைப்புகள், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டும், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மையை அலட்சியமாக கையாண்டதுதான், தற்போது பிரச்னை உக்கிரமடைந்துள்ளதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
மொத்தம், 186 கி.மீ., சுற்றளவுள்ள, 60 வார்டுகளை உள்ளடக்கிய திருப்பூர் மாநகரில், தினசரி, 700 முதல், 800 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. கடந்த, 10 ஆண்டுகள் முன்பே வார்டு வாரியாக குப்பையை தரம் பிரித்து, அகற்றுவதற்குரிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், திடக்கழிவு மேலாண்மையில், மாநகராட்சி நிர்வாகம் சுதாரிக்காமல், அலட்சியத்துடன் இருந்ததே தற்போது எழுந்துள்ள குப்பைப்பிரச்னைக்கு காரணமாக அமைந்துள்ளது.
பயனற்று கிடக்கின்றன
மொத்தம் 15 வார்டுகளுக்கு ஒரு குப்பை தரம் பிரிக்கும் கூடம், தென்னம்பாளையம், கோவில் வழி, நல்லுார், எம்.எஸ்., நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வார்டுகளுக்கு ஒரு நுண்ணுயிர் தயாரிப்பு கூடம் வீதம், 23 கூடங்கள் உள்ளன. அங்கு, குப்பையில் இருந்து நுண்ணுயிர் தயாரிக்க திட்டமிடப்பட்டது. அதில், ஆறு மட்டுமே இயங்குகிறது; எஞ்சியவை காட்சிப்பொருளாக உள்ளன. தென்னம்பாளையத்தில், தினசரி, 10 டன் காய்கறி மற்றும் உணவுக்கழிவில் இருந்து 'காஸ்' தயாரித்து, 68 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையிலான கட்டமைப்பும் பயனற்றே கிடக்கிறது. சந்தைப்பேட்டை நுண்ணுயிர் கூடத்தில், காய்கறி கழிவு அரைக்கும் இயந்திரம் தரமற்று இருப்பதால், அது, முழுபலன் தருவதில்லை.
தீராத இடம் தேடல்
வார்டு வாரியாக சேகரிக்கப்படும் குப்பைகளை மொத்தமாக கொட்டி, தரம் பிரித்து அகற்றுவற்கும், மாநகராட்சிக்கென பிரத்யேக இடமில்லை என்பதுதான், பிரச்னைக்கு மூலக்காரணம். இதனால், தினசரி குவியும் குப்பைகளை கொட்டுவதற்கு பாறைக்குழிகளை தேடிக் கொண்டிருக்கிறது, மாநகராட்சி நிர்வாகம். பாறைக்குழியில் குப்பைக் கொட்டுவதால் சுற்றுச்சூழல் கெடுவதோடு, நிலத்தடி நீர் மாசுபடுகிறது என்ற விழிப்புணர்வை பெற்ற மக்கள், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மாநகராட்சி நிர்வாகம் திகைத்துப்போய் நிற்கிறது.
அடிப்படையே 'ஆட்டம்'
மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி கூறியதாவது;மாநகரில், 60 வார்டுகளின் துாய்மைப்பணியும் தனியார்மயமாக்கப்பட்ட நிலையில், மக்களிடம் இருந்து, குப்பையை தரம் பிரித்து தான் வாங்க வேண்டும்; தரம் பிரித்து தான் அகற்ற வேண்டும். இதுதான் தனியார் மயத்தின் அடிப்படை பணி. ஆனால், அடிப்படையே தோல்வியடைந்துள்ளது. குப்பையை பிரித்து கொடுக்க மக்களை பழக்கப்படுத்த வேண்டும்; அதில் கண்டிப்புக்காட்ட வேண்டும். வார்டுகளில் குப்பை தரம் பிரிக்கும், நுண்ணுயிர் கூடம் உள்ளிட்ட கட்டமைப்புகள் இருப்பினும், அவை பயனற்று கிடக்கின்றன. குப்பை அகற்ற பல நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட நிலையில், மக்களிடம் இருந்து குப்பையை தரம் பிரித்து வாங்கி, இந்த கூடங்களின் வாயிலாக அவற்றை நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் அகற்றும் பணி மேற்கொள்ள வேண்டும்.
காட்சிப்பொருட்கள்
தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதியில் உள்ள உரம் தயாரிக்கும் மையம்.
காய்கறி மற்றும் உணவுக்கழிவு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் கூடம்.
முள்ளுக்காட்டில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையம்.