/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை விவகாரம்; யார் பொறுப்பு?
/
குப்பை விவகாரம்; யார் பொறுப்பு?
ADDED : ஆக 03, 2025 11:50 PM

திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது குப்பை அகற்றும் பிரச்னை. மாவட்ட அளவில் இது எதிரொலிக்கிறது.
தரம் பிரித்து வழங்க வேண்டும் கவிதா, சுகாதாரக்குழு தலைவர்:
திருப்பூரில் பல லட்சம் பேரின் பயன்பாட்டுக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், ஓட்டல் இறைச்சி கடைகள் உள்ளிட்டவற்றின் கழிவுகள் என பல்லாயிரம் கிலோ கழிவு உருவாகிறது.
அப்படி உருவாகும் கழிவுகளை தரம் பிரிப்பதில் எங்களுக்கு சிரமம் இருப்பது உண்மைதான். ஆனாலும் இருக்கின்ற வசதிகளைக் கொண்டு கழிவுகளை அகற்றி நகரின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் நாங்கள் தீவிர அக்கறை கொண்டிருக்கிறோம்.
குப்பைகளை தரம் பிரிப்பதில் இருக்கின்ற சிக்கல்கள் தரம் பிரித்த குப்பைகளை அப்புறப்படுத்துவதில் இருக்கின்ற இடர்பாடுகள் உள்ளிட்டவற்றை களைவதில் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.
பொதுமக்கள் மக்கும் குப்பைகளையும் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளையும் தனியாக பிரித்து வழங்கினால், சிக்கல் தீர்ந்துவிடும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக, 'எனது குப்பை - எனது பொறுப்பு' என்ற வகையில், செயல்பட வேண்டும்.
குப்பையில் 'அரசியல்' செல்வராஜ், இ.கம்யூ., கவுன்சிலர்:
திருப்பூரைப் பொறுத்த வரை குப்பை பிரச்னையில் பெரும் 'அரசியல்' நடக்கிறது. நகரில் குப்பையை அகற்ற வேண்டும் என்று போராடுவோர், பாறைக்குழிக்குச் சென்று குப்பையை கொட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உள்ளது. இது கண்டனத்துக்கும், வேதனைக்கும் உரிய விஷயம். எம்.பி., சுப்பராயன் முதல்வருக்கு ஏற்கனவே இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.
குப்பையை அகற்றாமல் நகருக்குள் சிரமம் மற்றும் பாறைக்குழியில் கொட்டும் இடத்தில் அவதி என மாநகராட்சி நிர்வாகம் பெரும் சிரமத்தை சந்திக்கிறது. இதனை கையாளும் முறை குறித்து நிபுணர் குழு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாறைக்குழியைப் பொறுத்தவரை, காளம்பாளையத்தில் மாநகராட்சி நிர்வாகம் உறுதி அளித்தபடி உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பாறைக்குழிகளில் குப்பை கொட்டும் போது, காஸ்டிங் வேஸ்ட் எனப்படும் இரும்பு துகள் லோடு கொண்டு வந்து கொட்டி சமன்படுத்தினால் அந்த இடம் கெட்டிப்படுத்தப்பட்டு, வேறு பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம்.
நிர்வாக ரீதியாக சிக்கல் சேகர், அ.தி.மு.க., கவுன்சிலர்:
மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை முறையாக இல்லை என்பது உண்மை. ஒப்பந்த நிறுவனம் இதனை தரம் பிரித்து எடுத்துச் சென்று முறையாக கையாள வேண்டும். ஆனால், அவர்கள் ஒட்டுமொத்தமாக அனைத்து கழிவுகளையும் ஒன்றாக சேர்த்து அகற்றுகின்றனர். காரணம் தரம் பிரித்து கொண்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனை அந்த ஒப்பந்தத்தில் இல்லை என்கின்றனர்.
குப்பை தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நுண்ணுர உற்பத்தி உள்ளிட்டவை முறையாக இயங்குவதில்லை. மேயர் அனைத்து கட்சியினரையும் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். குப்பை அகற்றுவதில் நிர்வாக ரீதியாகவும் சில சிக்கல்கள் உள்ளன.
டன் அடிப்படையில் ஒப்பந்தம் என்று தனியார் நிறுவனம் குப்பைகளை அகற்றுகிறது. அதேநேரம், 'பல்க் வேஸ்ட்' அடிப்படையில் வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டணம் வசூலிக்கின்றனர். நிறுவனங்கள் குப்பை வரி செலுத்துவதோடு, கட்டணமும் செலுத்துகின்றனர். இதை சரி செய்ய வேண்டும்.
பாறைக்குழி தீர்வல்ல... விஜயலட்சுமி, காங்., கவுன்சிலர்: குப்பை பிரச்னையில், அனைவரும் இணைந்து பிரச்னைக்கு தீர்வு காண முன் வர வேண்டும். பாறைக்குழியில் குப்பை கொட்டுவது என்பது நிரந்தர தீர்வு இல்லை. முறையாக குப்பைகள் பிரித்து உரிய வகையில் கையாள வேண்டியது அவசியம். அதற்கு கால அவகாசம் தேவை என்றாலும் நிரந்தர தீர்வாக அதை ஏற்படுத்த வேண்டும்.
காலா காலத்துக்கும் இப்பிரச்னை தொடர்ந்து இருக்கும். அதற்கான இடத்தையும், திட்டத்தையும் விரைந்து ஏற்படுத்தி செயல்படுத்த வேண்டும். நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் தற்காலிகமாக அதிக பட்சம் ஆறுமாத அளவுக்கு மாற்று ஏற்பாடுக்கு உரிய செயல்பாடு வேண்டும். இதை அரசியலாக்காமல் ஆக்கபூர்வமான முறையில் கொண்டு செல்ல வேண்டும்.