ADDED : செப் 12, 2026 08:11 PM
திருப்பூர்: மணியகாரம்பாளையம் நொய்யல் ஆற்றுப் பாலம் அருகே, கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்பை கழிவுகள் குவிந்து கிடந்தன. பல்வேறு கோரிக்கைகளுக்கு பின் அங்கிருந்த நுாற்றுக்கணக்கான லோடு குப்பைகள் அகற்றப்பட்டு, தற்போது மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அதே பகுதியில் நொய்யல் பாலத்தின் கீழ் ஆற்றின் கரையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. நேற்று மதியம் மாநகராட்சி குப்பை வாகனத்தில் கழிவுகளை துாய்மை பணியாளர்கள், ஆற்றின் கரையில் கொட்டிச் சென்றனர். அங்கு வந்த ‘வேர்கள்’ அமைப்பு தன்னார்வலர்கள், ஆற்றின் கரையில் குப்பை கொட்டக்கூடாது என எச்சரித்தனர்.
தொடர்ந்து, மற்றொரு ஆட்டோவில் குப்பை கழிவுகளை கொண்டு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால், மதியம் 3:00 மணியளவில் மீண்டும் ஒரு ஆட்டோவில் குப்பை கொண்டு வந்து அதே இடத்தில் கொட்டப்பட்டன. இதனால், அதிர்ச்சியடைந்த பசுமை ஆர்வலர்கள் வாகனத்தை சிறைப்பிடித்தனர். தகவலறிந்து வந்த மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர், இனி ஆற்றின் கரையில் குப்பைகள் கொட்டப்படாது: குப்பைகளை ஒருநாளில் அகற்றுதாகவும் உறுதியளித்தனர். இதனால், சிறைப்பிடிக்கப்பட்ட வாகனம் விடுவிக்கப்பட்டது.
