/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை தரம் பிரிப்பு; மாற்றம் மக்களிடம் துவங்கட்டும்
/
குப்பை தரம் பிரிப்பு; மாற்றம் மக்களிடம் துவங்கட்டும்
குப்பை தரம் பிரிப்பு; மாற்றம் மக்களிடம் துவங்கட்டும்
குப்பை தரம் பிரிப்பு; மாற்றம் மக்களிடம் துவங்கட்டும்
ADDED : அக் 26, 2025 11:39 PM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச்னை பெருகி வரும் நிலையில், அதற்கு மாற்று ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் மக்கள் குப்பைகளை தரம் பிரித்து, மறுசுழற்சி செய்ய தொடங்கியுள்ளனர்.
சில தனியார் நிறுவனங்களும் குப்பை மேலாண்மையில் ஈடுபட்டு வருகின்றன. குப்பையை தங்கள் வீட்டில் இருந்தே தரம் பிரிக்க வலியுறுத்திவரும், துப்புரவாளன் அமைப்பில் இருக்கும் பலர், குப்பை தரம் பிரித்தலில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அவர்கள் நம்முடன் பகிர்ந்தவை:
அடுத்த தலைமுறை பாதிக்கும் விஜயலட்சுமி, பல்லடம்:
மக்கும், மக்காத குப்பையை பிரித்து வைக்கிறோம். குப்பை வாங்க வருவோருக்கு பிரித்துதான் வழங்குவோம். எங்கள் வீட்டில் பிளாஸ்டிக் தவிர்த்து விட்டோம். சில்வர் பாத்திரம் பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக் தீமை என்று தெரிந்திருந்தும் ஏன் விற்க வேண்டும்? அதன் உற்பத்தியை தடுக்க வேண்டும்.
முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதன் விளைவு நமக்குத் தெரியாது, அடுத்த தலைமுறை பாதிக்கப்படும். எங்கள் வீதியில் சராசரியாக, 40 குடும்பத்தினர் உள்ளனர். நான் மட்டும் தரம்பிரித்து வைப்பதால் பயனில்லை. ஒவ்வொருவரும் குப்பை பிரித்தலில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடு எளி யது. ஆனால், ஆபத்தானது.
விழிப்புணர்வுஏற்படுத்துகிறேன் ருக்மணி, டீச்சர்ஸ் காலனி, திருப்பூர்:
வீட்டில் குப்பை பிரித்து வைக்கிறேன். பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஜெய்வாபாய், குமார்நகர், ராயபுரம், குமரானந்தபுரம், பத்மாவதிபுரம் உள்ளிட்ட பல பள்ளிகளுக்கு சென்று குப்பை தரம் பிரித்தலின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு செய்கிறோம்.
குழந்தைகளிடம் அவரவர் வீட்டில், வீதியில் குப்பை பற்றி பேசி ஊக்குவிக்கிறோம். குப்பை தரம் பிரித்தலால் துப்புரவு தொழிலாளர் சிரமம் சற்று குறையும். எங்கள் பகுதியில் குப்பை பிரச்னை குறைய, என்னால் இயன்ற அளவு முயற்சித்து வருகிறேன்.
வீட்டில் செடிகளைநடுங்கள் பாலகணேஷ், ரத்தினபுரி கார்டன்:
வீட்டில் தோட்டம் உள்ளதால் மக்கும் குப்பைகளை உரமாகப் போடுவோம். பேப்பர் போன்ற குப்பைகள் மக்குவதற்கு தாமதமாகும். அதனையும், பிளாஸ்டிக் பொருட்களையும் தரம்பிரித்து வைக்கிறோம். பிரித்து வைப்பது எங்களுக்கு பழகிவிட்டது.
வீட்டில் எல்லோரும் செடி, மாடித்தோட்டம் வையுங்கள், குப்பைக்கு தீர்வும் சுத்தமான காற்றும் கிடைக்கும். தொட்டியில் மண், மக்கும் குப்பைகள் இரண்டையும் போட சில நாட்களில் அது மண்ணோடு மண்ணாகி, உரமாகும்.
மகிழ்ச்சியாக இருக்கிறது ரேகா, குன்னாங்கல்பாளையம்:
கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவொரு குப்பையையும் மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் கொடுத்ததில்லை. பத்துக்கும் மேலான செடிகள் வைத்திருக்கிறேன். மக்கும் குப்பைகளை அதற்கு உரமாக போடுகிறேன். மக்காத பைகள், பிளாஸ்டிக் போன்றவற்றை கழுவி, வெயிலில் காயவைத்து ஒரு தொட்டியில் போடுவேன்.
மக்காத பொருட்கள் அதிகம் பயன்படுத்த மாட்டேன். எனவே அந்த தொட்டி நிரம்ப மூன்று மாதம் ஆகும். அது நிரம்பியதும் மறுசுழற்சிக்காக துப்புரவாளன் குழுவுக்கு கொடுத்து விடுவேன். எங்கள் வீட்டு கழிவு சுற்றுச்சூழலை பாதிக்கவில்லை என்று எண்ணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
துணிப்பைபயன்படுத்துகிறோம் சாந்தி, ஊத்துப்பாளையம்:
நாங்கள் இயற்கை விவசாயம் செய்கிறோம். முடிந்தளவு பிளாஸ்டிக்கை நாங்களே மறுபயன்பாடு செய்து புதியதை குறைத்துக்கொள்வோம். கடைகளுக்கு செல்வதற்கு துணிப் பையை பயன்படுத்துகிறோம். அமராவதி வாய்க்கால், குப்பைகளோடு தண்ணீர் வருவதால் மண்ணுக்குள் புகுந்து பாதிக்கும். அதற்கென ஆட்கள் வைத்து கழிவுகளை சுத்தம் செய்து, தோட்டத்துக்கு அனுப்புவோம்.
மக்கள் ஆற்றில் குப்பைகளை வீசுவது வருத்தமளிக்கிறது. பிளாஸ்டிக் உற்பத்தி நிறுத்தினால் அதன் பயன்பாடு இருக்காது. எல்லாவற்றையும் அரசு மட்டுமே செய்து விடாது. மக்களும் திருந்த வேண்டும். மாற்றம் நம்மிலிருந்தே துவங்க வேண்டும்.
மறுசுழற்சி சாத்தியமே!: நாங்கள் ஐந்து ஆண்டுகளாக 'துப்புரவாளன்' அமைப்பை அரசு அனுமதியுடன் தகுந்த அறிவியல் முறைப்படி மறுசுழற்சி செய்யும் குப்பை மேலாண்மை நிறுவனமாக செயல்படுகிறோம். பள்ளிகள், அபார்ட்மென்ட்டில் குப்பை தரம்பிரித்தல் பற்றிய விழிப்புணர்வு அளித்து குப்பை சேகரித்து மறுசுழற்சி செய்கிறோம். திருப்பூர் மாவட்டத்தில் ஐ.டி.சி. நிறுவனத்துடன் இணைந்து, 50க்கும் மேலான பள்ளிகளில் குப்பை சேகரித்து, மாணவருக்கு பென்சில், நோட்புக் போன்ற எழுதுபொருள் வழங்குகிறோம்.
வீடு வீடாக சென்று குப்பை சேகரிப்போம். திருமணம் போன்ற விசேஷம் மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் குப்பைகளை சேகரித்து, குப்பையில்லா நிகழ்வுக்கான சான்றிதழும் கொடுக்கிறோம். கழிவுகளை நிலத்தில் கொட்டாதபடி எல்லாவற்றையும் மறுசுழற்சி செய்கிறோம். மாநகராட்சி நிர்வாகம் இடம் கொடுத்து ஆதரவளித்தால் ஒரு வார்டு முழுதும் குப்பைகளை பிரித்து சுத்தம் செய்ய முடியும். எல்லா குப்பைகளையும் மறுசுழற்சி செய்வது, 95 சதவீதம் சாத்தியமே. மக்கள் குப்பைகளை எங்களிடம் ஆர்வத்துடன் கொடுக்கின்றனர். குப்பைகள் அதிகமாக இருப்பின் நாங்களே நேரில் வந்தும் வாங்கிக் கொள்வோம்.
- பத்மநாபன்: தலைவர்:

