/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரத்து குறைந்ததால் பூண்டு விலை உயர்வு
/
வரத்து குறைந்ததால் பூண்டு விலை உயர்வு
ADDED : ஜன 20, 2024 02:23 AM

திருப்பூர்;சீசன் முடிந்து, வரத்து குறைந்துவிட்டதால், கடந்த சில நாட்களாக, பூண்டு விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உ.பி., பஞ்சாப், ஹிமாசல பிரதேசம் பகுதிகளில், பூண்டு விளைவிக்கப்படுகிறது. அங்கிருந்து, நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
திருப்பூர் பூண்டு மண்டிக்கு, ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து, அதிக அளவு பூண்டு விற்பனைக்கு வருகிறது. சின்ன வெங்காயத்தை போலவே, இருப்பு வைக்கப்பட்ட பூண்டு, அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அறுவடை செய்து உடனடியாக விற்பனைக்கு வரும் பூண்டு சற்று குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.
சீசன் முடிந்துவிட்டதால், பழைய பூண்டு வரத்து வெகுவாக குறைத்துள்ளது. ஆண்டு முழுவதும், பூண்டு பயன்பாடு குறைவதில்லை; ஆனால், வரத்து அவ்வப்போது குறைந்து விடுவதால், விலை கடுமையாக உயர்ந்து விடுகிறது.
கடந்த சில வாரமாக வரத்து குறைந்ததால், பூண்டு விலை, கிலோ, 350 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தற்போது, 250 முதல், 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அறுவடை துவங்கிய பிறகு, பிப்., மாதத்தில் இருந்துதான் பூண்டு விற்பனைக்கு வரும். பழைய பூண்டு, மே மாதத்திற்கு பிறகுதான் சந்தைக்கு வந்து சேரும். வரும் பிப்., மாதத்துக்கு பின்னரே, பூண்டு விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.