/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடை உற்பத்தி நிலைத்தன்மை; நாளை விழிப்புணர்வு கருத்தரங்கு
/
ஆடை உற்பத்தி நிலைத்தன்மை; நாளை விழிப்புணர்வு கருத்தரங்கு
ஆடை உற்பத்தி நிலைத்தன்மை; நாளை விழிப்புணர்வு கருத்தரங்கு
ஆடை உற்பத்தி நிலைத்தன்மை; நாளை விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : ஆக 04, 2024 05:21 AM
திருப்பூர் : இறக்குமதி நாடுகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், ஆயத்த ஆடை உற்பத்தி நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்த திட்டமிட்டுள்ளது.
ஜவுளி இறக்குமதி செய்யும் நாடுகள், உற்பத்தி படிநிலைகளில் பல்வேறு கட்டுப்பாடு விதித்துள்ளன. சுற்றுச்சூழலுக்கு மாசுபாடு இல்லாத வகையில், ஆடை தயாரிக்கப்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டை பின்பற்றி வருகின்றன. அதற்காக, ஜவுளி ஏற்றுமதி செய்யும் நாடுகளும், உற்பத்தி படிநிலைகளில், பல்வேறு மாற்றங்களை புகுத்த தயாராக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் ஓர் அங்கமாக செயல்படும் ஆயத்தஆடை, அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரம் துறை திறன் கவுன்சில், திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறது. ஆயத்த ஆடை உற்பத்தியில், பசுமை சார் உற்பத்தி என்ற நிலைத்தன்மையை, அனைத்து நாடுகளும் எதிர்பார்க்கின்றன.
இந்திய ஆயத்த ஆடைத்துறையில், நிலைத்தன்மைக்கான நடைமுறைகளை மேம்படுத்த, 'நீடித்த நிலையான ஆயத்த ஆடை உற்பத்தி' என்ற வழிகாட்டி கற்றல் முறையை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த 'புளூஷைன்' நிறுவனத்துடன் இணைந்து, இறக்குமதி நாடுகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், பயிற்சி அளிக்க விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக, நாடு முழுவதும் விளக்க கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டரங்கில், நாளை சிறப்பு கருத்தரங்கு நடக்கிறது. ஆயத்த ஆடை மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், சுவிட்சர்லாந்து புளூஷைன் நிறுவன இயக்குனர் கத்தரீனா வெரினா மேயர் பேசுகின்றனர்.
திருப்பூருக்கு என்ன பயன்?
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன், திருப்பூர் அதிக அளவில் வர்த்தகம் செய்கிறது. அந்நாடுகளில் அமல்படுத்தப்படும் சட்ட ரீதியான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய, திருப்பூர் தயாராக வேண்டும். அதற்காகவே, இத்தகைய உற்பத்தி நிலைத்தன்மை தொடர்பான விழிப்புணர்வு ஆன்லைன் கற்றல் முறை, திருப்பூர் ஏற்றுமதியாளர்களை முழு அளவில் தயார்படுத்தும் என, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வர்த்தகர்கள் எதிர்பார்ப்பு புரிந்துகொள்ள உதவும்
இந்திய ஆயத்த ஆடைத்துறையில் நிலைத்தன்மை நடைமுறை மேம்படுத்தும் கற்றல் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
திருப்பூர், பெங்களூரு, மும்பை, ஜெய்ப்பூர், குருகிராம், கொல்கத்தா, நொய்டா ஆகிய ஏழு தொழில் நகரங்களில், சிறப்பு விளக்க கருத்தரங்கு நடத்த திட்டமிட்டுள்ளோம். சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனத்துடன் இணைந்து, வெளிநாட்டு வர்த்தகர்கள் எதிர்பார்க்கும் உற்பத்தி நிலைத்தன்மையை, இந்தியாவில் கட்டமைக்க இது, உதவியாக இருக்கும்.
- சக்திவேல், தலைவர், ஆயத்தஆடை மற்றும்வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில்.