/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து; பணம், உடைமைகளை இழந்து பொதுமக்கள் கதறல்

ADDED : ஜூலை 10, 2025 08:19 AM

திருப்பூர், : திருப்பூரில் அடுத்தடுத்து காஸ் சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், 42 தகர கொட்டகை வீடுகள் முற்றிலும் எரிந்து தரைமட்டமாகின. தீ விபத்தில், சேமிப்பு பணம், உடைமைகள் உள்ளிட்டவற்றை இழந்து குடும்பத்தினர் பரிதவிக்கின்றனர்.
திருப்பூர், காலேஜ் ரோடு, புளியங்காட்டைச் சேர்ந்தவர் தாராதேவி, 50. இவர் கல்லம்பாளையம், இந்திரா நகர், எம்.ஜி.ஆர்., நகரில், தகர கொட்டகையில் 42 வீடுகள் அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார்.
அவற்றில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச் சேர்ந்த மக்கள் வாடகைக்கு தங்களது குடும்பத்துடன் தங்கி, பனியன் நிறுவனம், கட்டட வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மதியம் 2:30 மணிக்கு, நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ள கொட்டகை வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. ஒரு சில வினாடிகளில், அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து சிதற ஆரம்பித்தன.
இதை பார்த்து மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அடுத்த சில நிமிடங்களில், வீடுகள் முழுதும் தீ பிடித்து எரிய துவங்கியது.
தகவலறிந்து திருப்பூர் வடக்கு, தெற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்; மற்ற சிலிண்டர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். இந்த கோர விபத்தில், சுவர் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகை வீடுகள் அனைத்தும் எரிந்து தரைமட்டமாகின. தீ விபத்தில் அனைத்து பொருட்களும் எரிந்து போனதை பார்த்து, மக்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.