/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாழ்விடம் இழக்கும் 'வாயில்லா ஜீவன்கள்'
/
வாழ்விடம் இழக்கும் 'வாயில்லா ஜீவன்கள்'
ADDED : மார் 15, 2024 12:45 AM

பல்லடம்;காட்டுத்தீ பரவல் காரணமாக, எண்ணற்ற உயிரினங்கள் வாழ்விடத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
கோடை துவங்கும் முன்பாகவே, வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிக வெப்பநிலை காரணமாக, மேய்ச்சல் நிலங்கள், காடுகள், செடி கொடிகள் உள்ளிட்டவை காய்ந்து கருகி வருகின்றன. இவை, எளிதில் தீப்பற்றிக் கொள்வதால், காட்டு தீ பரவல் உருவாகிறது.
கடும் வெப்பம் காரணமாக, அடிக்கடி உருவாகும் காட்டுத்தீ பரவலால் பல்வேறு தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இவ்வாறு ஏற்படும் தீ விபத்துகள் மேய்ச்சல் மற்றும் விளை நிலங்களையும் விட்டு வைப்பதில்லை. காட்டுப் பகுதிகளை சார்ந்து, மயில்கள், மான், எலிகள், பாம்பு, முயல் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை வசிக்கின்றன.
காட்டுத்தீ பரவல் காரணமாக, வனப்பகுதிகளில் வசிக்கும் உயிரினங்களின் வாழ்விடம் பாதிக்கப்படுகிறது. மேலும், திடீரென ஏற்படும் தீ விபத்தால், மேற்கூறிய விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.
இதுதவிர, மேய்ச்சல் நிலங்களில் ஏற்படும் தீ விபத்துகளால், மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடு மாடுகள் உள்ளிட்டவையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, தீ விபத்துகளை உடனுக்குடன் தீயணைப்புத் துறைக்கு தெரிவித்து, விபத்துகளை தடுக்க பொதுமக்களும் முன்வர வேண்டியது அவசியம்.
இதனால், பல்வேறு விலங்குகள், பறவைகள் ஆகியன உயிரிழப்பில் இருந்து காக்கப்படும்.

