சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு; என்ன சிக்கல்?
சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு; என்ன சிக்கல்?
ADDED : பிப் 21, 2026 07:01 AM
திருப்பூர்: 'சேவூர் வட்டாரத்தில் விளையும் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்' என்ற தொடர் விவசாயிகளின் கோரிக்கை, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
அவிநாசி, சேவூர், குட்டகம், தண்ணீர்பந்தல்பாளையம், போத்தம்பாளையம், தாமரைக்குளம், பாப்பான்குளம், முறியாண்டாம்பாளையம், கானுார், நடுவச்சேரி, வடுகபாளையம், மங்கரசுவலையபாளையம், தண்டுக்காரன்பாளையம், ராமியம்பாளையம் என சுற்றுவட்டார பகுதிகளிளான நம்பியூர், அந்தியூர், கோபி, குன்னத்துார் உள்ளிட்ட பல இடங்களில் நிலக்கடலை விவசாயத்தில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வறட்சியை தாங்கி நிலக்கடலை வளர்வதால், இப்பகுதி விவசாயிகளின் விருப்பத்தேர்வாக இந்த சாகுபடி உள்ளது. மழை பெய்யும் போது கிடைக்கும் நிலத்தடி நீர் மற்றும் நீராதாரத்தை கொண்டு விளையும் மானாவாரி பயிர் என்பதால், பலரும் இந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செம்மண் கலந்த சரளை மண் என்பதால், மண்ணில் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே உள்ளது. இதனால், விளையும் கடலைச் செடியிலும் பருப்புகள் தரமாக மற்றும் சத்து நிறைந்து ஆரோக்கியமாகவும் இருப்பதால், இங்கு உற்பத்தி செய்யும் கடலைக்கு மவுசு அதிகம்.
தமிழகத்தில், 32 வேளாண் விளைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது.
முன்னெடுப்பு வேண்டும் வேளாண் துறையினர் கூறுகையில், ''சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
புவிசார் குறியீடு பொறுத்தவரை, அந்தந்த ஊரில் எது பிரபலமாக, தனித்துவத்துடன் இருக்கிறதோ அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவது தான், வழக்கமாக இருந்து வருகிறது.
அவ்வகையில் நீலகிரி தேயிலைத் துாள், திண்டுக்கல் பூட்டு, பத்தமடை பாய், ஈரோடு மஞ்சள் உள்ளிட்ட, அந்தந்த ஊரின் பிரபல தயாரிப்புகள் புவிசார் குறியீடு பெறுகின்றன.
அந்த வரிசையில், சேவூர் நிலக்கடலைக்கென தனித்துவ அடையாளம் இருக்க வேண்டும்; அதற்கான முன்னெடுப்பு எடுக்கப்பட வேண்டும்'' என்றனர்.
தனித்துவத்துக்கு: தேவை அங்கீகாரம்: சேவூர் நிலக்கடலை, நாட்டுக்காய் இனத்தை சேர்ந்தது; இதில், எண்ணெய் சத்து அதிகம். தற்போது பல இடங்களில் வீரிய விளைச்சல் தரும் 'ைஹபிரிட்' நிலக்கடலை விளைவிக்கப்படுகிறது. இது அளவில் பெரிதாக இருப்பினும், எண்ணெய் சத்து குறைவு எனக்கூறப்படுகிறது. அத்தகைய நிலக்கடலை, கடலை மிட்டாய் தயாரிப்புக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, சேவூர் நிலக்கடலையின் தனித்துவத்தை அங்கீகரித்து புவிசார் குறியீடு வழங்கினால், நிலக்கடலை விவசாயம் செழிக்கும்.
சேவூர் ஏல மையத்தின் வாயிலாக நிலக்கடலை விற்பனை செய்யப்படுகிறது. அதிகளவு விவசாயிகள் ஏல விற்பனைக்கு நிலக்கடலையை வழங்கினாலும், சொற்ப அளவு வியாபாரிகள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்று, ஏலம் கோருகின்றனர்; அதிக வியாபாரிகள் பங்கேற்க, புவிசார் குறியீடு வழங்கப்படுவது உதவியாக இருக்கும்.
- சக்திவேல்: விவசாயி:
