/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குற்றம் களைதல்! தீவிர முனைப்பு காட்டும் கமிஷனர்; புதிய திட்டத்தில் களமிறங்கும் போலீசார்
/
குற்றம் களைதல்! தீவிர முனைப்பு காட்டும் கமிஷனர்; புதிய திட்டத்தில் களமிறங்கும் போலீசார்
குற்றம் களைதல்! தீவிர முனைப்பு காட்டும் கமிஷனர்; புதிய திட்டத்தில் களமிறங்கும் போலீசார்
குற்றம் களைதல்! தீவிர முனைப்பு காட்டும் கமிஷனர்; புதிய திட்டத்தில் களமிறங்கும் போலீசார்
ADDED : செப் 26, 2024 05:55 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி, குற்றங்களை தடுக்கவும், குறைக்கவும் வகையில் 'டெடிகேட்டடு பீட்' திட்டம் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
திருப்பூர் மாநகர பகுதியில், குற்றங்களை தடுக்கவும், குறைக்கவும் பல்வேறு நடவடிக்கை போலீசாரால் மேற்கொள்ளப்படுகிறது. அதில், ஸ்டேஷன் வாரியாக, 'பீட்' பிரிக்கப்பட்டு, போலீசார் ரோந்து செல்கின்றனர். வழக்கம். இதற்கு முன், ஜி.பி.எஸ்.,-ல், ரோந்து பணியை கண்காணிக்க 'இ-பீட்', 'பிங்க் பீட்' என்ற வகையில், ஏராளமான வகையில் ரோந்து பணியை மேற்கொள்ள அமல்படுத்தினர்.
இவை அனைத்தும் ஆரம்பித்த வேகத்திலேயே முடங்கி விட்டது. அதிகாரிகள் மாறும் போது, ஏற்கனவே இருக்கும் பழைய நடவடிக்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காமல் கடந்து சென்று விடுகின்றனர். தற்போது பொறுப்பேற்றுள்ள கமிஷனர் லட்சுமி மாநகரில் ஏற்கனவே உள்ள 'பீட் சிஸ்டம்' முறைகள் குறித்து அறிந்து, குறைபாடுகள், முழுமையாக களைய ஆலோசனை மேற்கொண்டார்.
நாளை முதல் அமல்
இதனை தொடர்ந்து, 'டெடிகேட்டட் பீட்' ரோந்து பணியை அமலுக்கு கொண்டு வர உள்ளனர். இதற்காக அந்தந்த ஸ்டேஷன் பகுதியில் உள்ள அவுட் போலீஸ் ஸ்டேஷன்கள் உட்பட மேலும், கூடுதலாக அவுட் போலீஸ் பாய்ன்ட் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே, சிட்டியில், 22 அவுட் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும், தலா, 2 போலீஸ் வீதம், 44 போலீசார் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
புதிய திட்டத்தில் போலீசாரை எளிதாக மக்களை அணுகவும், சம்பந்தப்பட்ட ஏரியா குறித்து நன்கறிந்த போலீசாரை பணியில் அமர்த்தி விரைந்து செல்லும் வகையில் அமைத்துள்ளனர். எந்த விதத்தில் செயல்பட வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கி, பயிற்சி அளித்து வருகின்றனர். 'பீட்' போலீசாருக்கு என தனியாக மொபைல் போன் வழங்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் கண்காணிப்பு
ரோந்து பணி, காலை, 8:00 முதல், 2:00 மணி வரை, மதியம், 2:00 முதல், 10:00 மணி வரை மற்றும் இரவு, 10:00 முதல் மறுநாள் காலை, 8:00 மணி வரை என மூன்று ஷிப்ட்டாக பிரித்து, சுழற்சி முறையில் கண்காணிக்க உள்ளனர். வழக்கமாக ரோந்து போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 'பீட்' களில் வலம் வருவார்கள். புதிய முறையில் காலை, மாலை என, ரோந்து சென்று விட்டு, திரும்ப அவுட் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விடுவர். இந்த முறையில், 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருப்பார்கள்.
மக்கள் எளிதாக அணுகலாம்
'டெடிகேட்டட் பீட்' குறித்து, போலீஸ் கமிஷனர் லட்சுமி கூறியதாவது:
'பீட்' சிஸ்டம் முறை என்பது போலீஸ் துறையில் ஏற்கனவே உள்ளது. தற்போது, திருப்பூரில் மேம்படுத்தப்பட்டு புதிய நடைமுறை, 27ம் தேதி (நாளை) முதல் அமல்படுத்துகிறோம். குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகாத, சிறப்பாக பணியாற்றும் போலீசாரையும் தேர்ந்தெடுத்துள்ளோம்.
புதிய திட்டத்தில் எந்நேரத்திலும் பொதுமக்கள் அவுட் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள போலீசாரை அணுகலாம். தங்கள் பிரச்னைகள் குறித்து தெரியப்படுத்தலாம். அதன் தன்மைகளை பொறுத்து, உயரதிகாரிகள் விசாரிப்பர். இதனை அனைத்தையும் துணை கமிஷனர், உதவி கமிஷனர் கண்காணிப்பார்கள்.
குறிப்பிட்ட இடத்தில் எப்போதும், இரு போலீசார் இருப்பார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட மொபைல் போன், 24 மணி நேரமும் இருக்கும். இந்த எண்கள், பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும். அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகள், மத வழிபாட்டு தலங்கள் என, அனைத்தையும் ரோந்து போலீசார் கண்காணிப்பர்.
இவ்வாறு, அவர் கூறினார்.