/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜி.ஹெச்சா, தனியார் மருத்துவமனையா? சண்டையில் உயிரை இழந்த தாய்மாமன்
/
ஜி.ஹெச்சா, தனியார் மருத்துவமனையா? சண்டையில் உயிரை இழந்த தாய்மாமன்
ஜி.ஹெச்சா, தனியார் மருத்துவமனையா? சண்டையில் உயிரை இழந்த தாய்மாமன்
ஜி.ஹெச்சா, தனியார் மருத்துவமனையா? சண்டையில் உயிரை இழந்த தாய்மாமன்
ADDED : ஜூலை 11, 2025 02:17 AM
திருப்பூர்,:குழந்தைக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என, உறவினர்களில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில், குழந்தையின் தாய்மாமனை கத்தியால் குத்தி கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், பி.என்., ரோடு, குமரானந்தபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி, 31; டிரைவர். இவரது தங்கை பிரியாவின், ஒன்றரை வயது பெண் குழந்தை, வீட்டின் முன் நேற்று முன்தினம் இரவு விளையாடிக் கொண்டிருந்தது.
அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய், குழந்தையை கடித்தது. உடனடியாக குழந்தையை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
குழந்தையை நாய் கடித்தது குறித்து அறிந்து, இரு குடும்பத்தினர், உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.
குழந்தையை பார்க்க கருப்பசாமி, குழந்தையின் தந்தை கார்த்திகேயனின் அக்கா கணவரான ஊத்துக்குளியை சேர்ந்த குலசிவேலு, 51, உள்ளிட்டோர் வந்தனர்.
அப்போது, 'குழந்தையை எதற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தீர்கள்? தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியது தானே' என, கருப்பசாமி கேள்வி எழுப்பி தகாத வார்த்தையில் பேசினார்.
இதைக்கேட்ட குலசிவேல், 'நாய்க்கடிக்கு அரசு மருத்துவமனையில் தான் நன்றாக சிகிச்சை அளிப்பர்' என, கூறினார். இதில், மருத்துவமனையிலேயே இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், கருப்பசாமி, குலசிவேலுவை தாக்கினார்.
ஆத்திரமடைந்த குலசிவேலு, மறைத்து வைத்திருந்த கத்தியால், கருப்பசாமியின் கழுத்தில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கருப்பசாமியை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். குலசிவேலை, திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

