/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத விளம்பர பலகைகள்; விதி மீறலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத விளம்பர பலகைகள்; விதி மீறலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத விளம்பர பலகைகள்; விதி மீறலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத விளம்பர பலகைகள்; விதி மீறலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஏப் 25, 2025 07:59 AM

பல்லடம் ; பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் விதிமுறை மீறி வைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பர பலகைகள், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாய் அமைந்துள்ளன.
பல்லடம் வழியாக செல்லும் கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதால், சரக்கு போக்குவரத்துக்கு இது பிரதானமாக உள்ளது.
இவ்வாறு வாகன போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில், ராட்சத விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், விளம்பர பலகைகள் வைக்க ஐகோர்ட் கட்டுப்பாடு விதித்துள்ளது. இருப்பினும், விதிமுறை மீறி விளம்பர பலகைகள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வருகின்றன. பல்லடம் வட்டாரம், காற்று நிறைந்த பகுதியாகும். வழக்கத்தை காட்டிலும் இங்கு காற்றின் வேகம் அதிகம் இருப்பதன் காரணமாகவே, இப்பகுதியில் காற்றாடிகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு காற்று அதிகம் உள்ள இப்பகுதியில், விளம்பர பலகைகள் வைப்பது மிகவும் ஆபத்தானது.
சூறைக்காற்றுக்கு வீழ்ந்த பேனர்கள்
சமீபத்தில், பல்லடம் வட்டாரத்தில் வீசிய சூறைக்காற்றுக்கு, எண்ணற்ற விளம்பர பலகைகள், பேனர்கள் வீழ்ந்தன. மொபைல் போன் டவரும் கூட, பலத்த காற்றுக்கு முறிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, காற்றின் வேகம் அதிகம் உள்ள இப்பகுதியில், வாகன போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலையில், விதிமுறை மீறி ராட்சத விளம்பர பேனர்கள் வைப்பது ஆபத்தில்தான் முடியும்.
நெடுஞ்சாலைத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகங்கள் இவற்றை கண்டுகொள்ளாததால், பில்லர்கள் அமைத்தும், கட்டடங்கள் மீதும் விதிமுறைகளை மீறி, தங்களது இஷ்டத்துக்கு விளம்பர பலகைகள் வைப்பது தொடர்கதையாக உள்ளது. அதிகாரிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு, ராட்சத விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

