/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பரிசு ஆசை; நம்பவே நம்பாதீர்கள்'
/
'பரிசு ஆசை; நம்பவே நம்பாதீர்கள்'
ADDED : டிச 09, 2024 06:43 AM

திருப்பூர்,: ''குழந்தையுடன் வாகனத்தில் செல்லும் போது, மிகுந்த கவனத்துடன் சென்றுவர வேண்டும்; சாலைவிதிமுறைகளை மீறக்கூடாது,'' என, இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் பேசினார்.
திருப்பூர் தெற்கு போலீசார் சார்பில், போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. கரட்டாங்காடு பகுதியில் நடந்த கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ்.ஐ., தங்கவேல், ரோந்து காவலர் அருண்குமார் ஆகியோர், மக்களை சந்தித்து பேசினர்.
செல்லாண்டியம்மன் துறை அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்களுடன் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், எஸ்.ஐ., விஜயகுமார், எஸ்.எஸ்.ஐ., லோகராஜ், தலைமை காவலர் கண்ணன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
இன்ஸ்பெக்டர் பேசியதாவது:
பொதுமக்கள், முதலில் தங்களது உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்; ஆரோக்கியமாக வாழ தேவையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். 'டூ - வீலர்' வைத்துள்ள வீடுகளில், பெண்கள்தான், 'ெஹல்மெட்' அணிய வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும். குழந்தைகளும், தங்களது பெற்றோர் கட்டாயம் ெஹல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வலியுறுத்த வேண்டும்.
ரோடு விபத்தில், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தான் அதிகம் இறக்கின்றன. குழந்தையுடன் வாகனத்தில் செல்லும் போது, மிகுந்த கவனத்துடன் சென்றுவர வேண்டும்; சாலை விதிமுறைகளை எப்போதும் மீறக்கூடாது.
'சைபர் கிரைம்' எனப்படும், ஆன்லைன் குற்றம் அதிகம் நடக்கிறது. வங்கி கணக்கில் இருந்து முறைகேடு செய்து, பணத்தை திருடிவிடுகின்றனர். ஏ.டி.எம்., கார்டு 'பாஸ்வேர்டு' யாருக்கும் தெரியாமல் பராமரிக்க வேண்டும்.
மொபைல் போனில் அழைத்து, வங்கி கணக்கு, ரகசிய குறியீட்டு எண் என, எவ்வித விவரம் கேட்டாலும் பகிரக்கூடாது. பரிசு விழுந்துள்ளதாக கூறினாலும் நம்பி, விவரங்களை தெரிவித்து ஏமாறக்கூடாது. 'லிங்க்' அனுப்பினால் கூட அதை புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.