/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தினமும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாமே!
/
தினமும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாமே!
ADDED : செப் 25, 2024 12:16 AM
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர் தரிசனம் செய்கின்றனர். விேஷச நாட்களில், ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வழிபடுகின்றனர். இக்கோவிலில், தமிழக அரசு திட்டத்தில், தினமும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
நகரின் மையத்தில் இருப்பதால், தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர் வந்து செல்வதாலும்,'டோக்கன்' கிடைக்காமல் தினமும் தகராறு ஏற்படுகிறது. காலை, 10:00 மணி முதல், அன்னதானத்துக்காக, பக்தர்கள் வரிசையில் அமர்கின்றனர். அவர்களுக்கு, 11:30 மணிக்கு ஆண்கள், பெண்கள் என, தலா, 25 டோக்கன் மட்டும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, 12:00 மணிக்கு அன்னதானம் ஒன்றரை மணி நேரம் காத்திருந்தும், 'டோக்கன்' கிடைக்காதபோது, கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
கோவிலில், உச்சிகால பூஜை நடந்து கொண்டிருக்கும் போது, அன்னதான டோக்கன் கிடைக்காததால் ஏற்படும் வாக்குவாதம், இடையூறாக இருக்கிறது. இத்தகைய நிலையை தவிர்க்க, தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில், திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், 'திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அன்னதான உண்டியல் வருவாயே, அன்னதானத்துக்கு போதுமானதாக இருக்கும். நிதி ஆதாரம் உள்ள கோவில் என்பதால், தினமும், 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பக்தர்களிடையே ஏற்படும் வாக்குவாதத்தை தவிர்க்கும் வகையில், தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்க, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.
இதே விவகாரம் குறித்து, தி.மு.க., தொழிற்சங்க பொதுக்குழு உறுப்பினர் ரவி, கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ''ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், இரண்டு மணி நேரம் காத்திருந்த பின்னரும், அன்னதான டோக்கன் கிடைக்காமல், பக்தர்கள் வாக்குவாதம் செய்ய நேரிடுகிறது. அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது; எனவே, அன்னதானத்தில் கூடுதல் நபர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்,'' என்று தெரிவித்துள்ளார்.