/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கூப்பிட்ட குரலுக்கு பகவான் ஓடோடி வருவார்'
/
'கூப்பிட்ட குரலுக்கு பகவான் ஓடோடி வருவார்'
ADDED : செப் 25, 2024 12:23 AM

திருப்பூர் : ''பகவானின் உள்ளம் மென்மையானது, மேன்மையானது என்பதால் தான், அவர் பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகிறார்,'' என்று வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார்.
திருப்பூர், காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் மூன்று நாள் பக்தி சொற்பொழிவு நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று, 'காடுறைந்த மெல்லடி' என்ற தலைப்பில் வேளுக்குடி கிருஷ்ணன் பேசியதாவது:
ராஜகுமாரர்கள் யாரும் காட்டுக்கு செல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால், தசரதன் பெற்ற பிள்ளை என்பதாலே ராமன் காட்டுக்கு சென்றார். பகவான் உள்ளத்தில் மேன்மையானவர். மெல்லடி என்பது மென்மையான அடி. அவரின் திருவடியும் மென்மை. திருமாளின் உள்ளமும் மென்மையானது. அவர் திருவடியை பார்த்தாலே சிவந்து விடும்.
உலகம் பிரளயம் ஆன போது, நாம் எங்கிருந்தோம். கலியுகம் ஆரம்பித்து, 5,126 ஆண்டுகளாகிறது. அடுத்த பிரளயம் ஏற்பட பல லட்சம் ஆண்டுகளாகும். யாரும் பயப்பட வேண்டியதில்லை. நாம் அன்றாடம் வாழ்க்கையே பிரளயமாக தான் உள்ளது.
வாழ்க்கையில் செய்யும் தவறுகளே பிரளயத்துக்கு வழிவகுக்கும். கடுமையான உள்ளம் படைத்தவர் என்றால், யாரையும் படைத்து இருக்க மாட்டார். அவர் உள்ளம் மேன்மையானது. உள்ளத்தில் மென்மையிருப்பதால் தான், பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகிறார்.
அவர் யாரிடமும் உயர்வு, தாழ்வு பார்க்கவில்லை. நாம் தான் பார்க்கிறோம். மகாத்மாக்கள், பக்தர்கள் என, அனைவரும் தன்னை விட்டு பிரிய கூடாது என நினைப்பார். பிறரின் இன்பம், துன்பம், ஆபத்து என, அனைத்தையும் தன்னுடையதாக நினைத்து வருத்தப்படுவார். ஒவ்வொரு சூழலில் அதனை நமக்காக, நம்முடன் இருந்து எதிர்கொள்ளும் மென்மையான உள்ளம் கொண்டவர்.
இவ்வாறு, அவர் பேசினார்.