/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசாணிக்காய் விளைச்சல் பாதிப்பு; விலை இருந்தும் பயன் இல்லை
/
அரசாணிக்காய் விளைச்சல் பாதிப்பு; விலை இருந்தும் பயன் இல்லை
அரசாணிக்காய் விளைச்சல் பாதிப்பு; விலை இருந்தும் பயன் இல்லை
அரசாணிக்காய் விளைச்சல் பாதிப்பு; விலை இருந்தும் பயன் இல்லை
ADDED : அக் 07, 2025 09:08 PM

உடுமலை; உடுமலை பகுதிகளில் அரசாணிக்காய் அறுவடை துவங்கியுள்ள நிலையில், மழையில்லாததால் மகசூல் குறைந்துள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், அரசாணிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மூன்று மாத சாகுபடி பயிரான, இக்காய் நாட்டு ரகமாக உள்ளது.
கேரளா மற்றும் வட மாநில மக்கள் அதிகளவு உண்ணும் காயாக உள்ளதால், உடுமலையில் விளைவிக்கப்படும், அரசாணிக்காய், உள்ளூர் சந்தை மட்டுமின்றி, கேரளா, ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்குச்செல்கிறது.
தற்போது, இப்பகுதிகளில் அதிகளவு சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இரு மாதமாக மழைப்பொழிவு குறைவு, வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக, காய்கள் சிறியதாக மாறி, மகசூல் குறைந்துள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: அரசாணிக்காய், உள்ளூர் சந்தை மட்டுமின்றி, கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு அதிகளவு விற்பனைக்கு செல்கிறது. அங்குள்ள மக்கள் அரசாணிக்காயை விரும்பி உண்கின்றனர்.
அங்கு விளையாததோடு, இங்கு விளையும் அரசாணிக்காய்க்கு என தனி மதிப்பு உண்டு. நாட்டு காய், சுவை ஆகிய காரணங்களினால், இப்பகுதியில் உற்பத்தியாகும் காய்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
தற்போது, பண்டிகை சீசன் காரணமாக, அதிகளவு அரசாணிக்காய் விற்பனையாகிறது. பல மாதமானாலும் கெடாமல் அப்படியே இருக்கும். அதனால், வட மாநிலங்களுக்கு அதிகளவு செல்கிறது.
விவசாயிகளிமிருந்து வட மாநில வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து, சரக்கு லாரி, கன்டெய்னர் லாரிகளில் ஏற்றிச்செல்கின்றனர். தற்போது, விளைச்சல் குறைவு, தேவை அதிகரிப்பு காரணமாக, கிலோ ரூ.22 வரை விற்பனையாகிறது.
மழையில்லாததால், செடிகள் பாதிப்பு, பூ பருவத்தில் நோய்த்தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், மகசூல் குறைந்தாலும், ஓரளவு விலை கிடைத்து வருகிறது.
இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.