/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பஸ் டயர் 'டமால்' பயணிகள் அலறி ஓட்டம்
/
அரசு பஸ் டயர் 'டமால்' பயணிகள் அலறி ஓட்டம்
ADDED : ஜன 11, 2025 09:14 AM

பல்லடம் : பொள்ளாச்சி -- ஈரோடு செல்லும் அரசு பஸ் (டிஎன்.38.என்.3069) புதுப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை, நுாற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டது. சுல்தான்பேட்டையில் இருந்து, பஸ், பல்லடம் நோக்கி வந்து கொண்டிருக்க, பின்பக்க டயரில் இருந்து புகை வெளியேறியது. பயணிகள் இது குறித்து தெரிவித்ததை தொடர்ந்து, டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதையடுத்து, பயணிகள் ஒவ்வொருவராக கீழே இறங்கி வந்த நிலையில், டயர் 'டமால்' என்ற சத்தத்துடன் வெடித்தது.
அதிர்ச்சியடைந்த பயணிகள், அலறியடித்தபடி ஓட்டமெடுத்தனர். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி பொதுமக்கள், பஸ் மீண்டும் பொள்ளாச்சி டிப்போவுக்கு செல்ல உதவினர். இதற்கிடையே, பஸ்ஸில் வந்த பயணிகள் அனைவரும், மாற்று பஸ் மூலம் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பஸ்ஸின் 'பிரேக் ஷூ' சரிவர வேலை செய்யாமல் அழுத்தம் கொடுத்ததால், பின்பக்க டயர் சரிவர இயங்காமல் சாலையில் உரசியபடி வந்துள்ளது. இதனால், ஏற்பட்ட வெப்பம் காரணமாக, டயர் வெடித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, பஸ் ஓடும் போது புகை வந்ததன் காரணமாக நிறுத்தப்பட்டது. இல்லையெனில், பஸ் ஓடிக்கொண்டிருக்கும்போதே டயர் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.