UPDATED : ஜூலை 23, 2026 11:13 PM
ADDED : ஜூலை 23, 2026 08:21 PM
பல்லடம்:பல்லடம் அருகே தனியார் பஸ் மோதியதில், அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து பயணிகள் பதற்றமடைந்தனர்.
கோவையில் இருந்து 40 பயணிகளுடன் அரசு பஸ் மாலை பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் தனியார் பஸ்சும் வந்தது. கோடங்கிபாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள டிவைடரை கடக்க அரசு பஸ் வேகத்தை குறைத்தபோது, பின்னால் வந்த தனியார் பஸ் அதன் மீது மோதியது.
இதில் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து, கண்ணாடித் துகள்கள் பின்புற இருக்கைகளில் அமர்ந்திருந்த பயணிகள் மீது சிதறி விழுந்தன. இதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. தனியார் பஸ்சில் இருந்த சிறுவன் ஒருவரும் கீழே விழுந்தார். இருப்பினும், யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை.
இடைவெளி கடைப்பிடிக்காமல் அதிவேகமாக வந்த தனியார் பஸ்சே விபத்துக்கு காரணம் என பயணிகள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, அரசு பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.
