ADDED : நவ 23, 2025 06:42 AM

பல்லடம்: வாகனங்கள் வெளியேற்றும் புகையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே, வாகனங்களுக்கு புகை பரிசோதனை சான்று கட்டாயமாக்கப்படுகிறது.
தனியார் வாகனங்களும் இந்த பரிசோதனையை மேற்கொள்ளும் போது, அரசு பஸ்கள் ஏனோ அக்கறை காட்டுவதில்லை. மாறாக, பெரும்பாலான அரசு பஸ்கள், போதிய பராமரிப்புகள் இன்றி, கரும்புகையை வெளியேற்றுகின்றன.
கொசு மருந்து அடிக்கும் வாகனங்களைப் போல் புகையை வெளியேற்றும் அரசு பஸ்களால், கடுமையான சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் செயல்பட்டு வரும் நிலையில், புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அதிகாரிகளும் இது குறித்து ஆய்வு மேற்கொள்வதில்லை.
எனவே, காற்று மாசை கருத்தில் கொண்டு, அரசு பஸ்களில் வெளியேறும் புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ்களை முறையாக பராமரித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில், பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

