/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெல் கொள்முதல் செய்ய அரசு மையங்கள்; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
/
நெல் கொள்முதல் செய்ய அரசு மையங்கள்; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
நெல் கொள்முதல் செய்ய அரசு மையங்கள்; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
நெல் கொள்முதல் செய்ய அரசு மையங்கள்; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
ADDED : ஜூன் 23, 2025 10:43 PM
உடுமலை; 'காரீப்' பருவ நெல் மகசூல் அறிக்கையின் பேரில், திருப்பூர் மாவட்டத்தில், நடப்பாண்டு, தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உடுமலை அமராவதி அணை வாயிலாக, பாசன வசதி பெறும் பகுதிகளில் நெல் பிரதான சாகுபடியாக உள்ளது. உற்பத்தியாகும் நெல்லை நிலையான விலைக்கு விற்பனை செய்ய நெல் கொள்முதல் மையங்கள் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அவ்வகையில், கடந்த சில ஆண்டுகளாக, மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின்படி, நுகர்பொருள் வாணிப கழகத்தால் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்படுகிறது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாக அறிக்கை:
தமிழக அரசு உத்தரவு அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் கீழ்பவானி கால்வாய் பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் நெல் மகசூல் அறிக்கையின் படி, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தால் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைகேற்ப திறக்கப்படுகிறது.
அரசால் நிர்ணயிக்கப்படும் கொள்முதல் விலைப்படி, கொள்முதல் செய்து, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு 'காரீப்' பருவமான 2024-25 ஆம் ஆண்டில், நெல் கொள்முதல் விலை சன்னரகம் குவிண்டால் ஒன்றுக்கு ஆதார விலை ரூ.2,320- ஊக்கத்தொகை ரூ.130- என மொத்தம் ரூ.2,450 அரசால் நிர்ணயிக்கப்பட்டது.
பொது ரகத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ஆதார விலை. ரூ.2,300- ஊக்கத் தொகை ரூ.105, மொத்தம் ரூ. 2,405- எனவும் நிர்ணயிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.
அரசாணையின் பேரில், காங்கேயம் தாலுகாவில், 6; தாராபுரம் 8; மடத்துக்குளம் தாலுகாவில், 4, உடுமலை தாலுகாவில் ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் என மொத்தம் 19 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.
இதுவரை சன்ன ரகம் 16,521.320 மெ.,டன், பொது ரகம் 2092.360 மெ.,டன் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அதற்குண்டான தொகை ரூ. 455.093 -கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கழக அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, பொது விநியோகத் திட்ட அரிசியாக பெறப்பட்டு வருகிறது.
தற்போது, மடத்துக்குளம் தாலுகா கணியூர் மற்றும் ருத்ராபாளையம் ஆகிய இரு இடங்களிலும், உடுமலை தாலுகா கல்லாபுரம் கிராமத்திலும், நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
மேலும், காரீப் பருவம் 2025--26 க்கான நெல் மகசூல் அறிக்கையின் பேரில், செப்., மாதம் 1-ம் தேதி முதல் அறுவடை துவங்க உள்ளதால், மாவட்டத்தில் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து, கொள்முதல் செய்ய தேவையான சாக்கு பைகள் உட்பட அனைத்து தளவாடப் பொருட்களும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபப் கழகம் திருப்பூர் மண்டலத்தில் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.