/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரம் வளர்க்க அரசு தருது நிதி இங்கோ மரங்கள் 'அதோகதி'
/
மரம் வளர்க்க அரசு தருது நிதி இங்கோ மரங்கள் 'அதோகதி'
மரம் வளர்க்க அரசு தருது நிதி இங்கோ மரங்கள் 'அதோகதி'
மரம் வளர்க்க அரசு தருது நிதி இங்கோ மரங்கள் 'அதோகதி'
ADDED : பிப் 23, 2024 12:13 AM

பல்லடம்;பல்லடம் வட்டார பகுதியில், சில நாட்களாக, நிழல் தரும் மரங்களை வெட்டி அழிப்பதும், கடத்திச் செல்வதும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, தெற்குப்பாளையம், சித்தம்பலம், என்.எச்., ரோடு உட்பட பகுதிகளில், அடுத்தடுத்து மரங்கள் வேருடன் வெட்டி சாய்க்கப்பட்டன. பசுமை ஆர்வலர்கள் சிலர், வருவாய் துறை அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக புகார் அளித்து வருகின்றனர். அதற்குள், கல்லம்பாளையம் பகுதியில் எண்ணற்ற மரங்கள் வெட்டி அளிக்கப்பட்டுள்ளன.
சமூக ஆர்வலர் அண்ணாதுரை கூறியதாவது:
வேப்ப மரங்கள் வளர்க்க சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இங்கோ, ஏற்கனவே உள்ள வேம்பு உட்பட ஏராளமான மரங்கள் தொடர்ச்சியாக வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தடுக்க வேண்டிய வருவாய்த்துறை செயலிழந்து காணப்படுகிறது.
கல்லம்பாளையத்தில், பட்டா நிலத்தை சுத்தம் செய்வதாக கூறி, ஓடையில் உள்ள மரங்களும் அனுமதியின்றி வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. ஓடை மீது வழி ஏற்படுத்தும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர். எனவே, இதுகுறித்து, உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புகார் குறித்து நீரோடையில் ஆய்வு செய்த ஆர்.ஐ., செந்தில்ராஜ் கூறுகையில், ''மரங்கள் வெட்டப்படுவதாக இரவே தகவல் கிடைத்து நேரில் ஆய்வு செய்தேன். பட்டா இடத்தை துாய்மை செய்யும்போது வழியில் இருந்த சில மரங்களும் வெட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்,'' என்றார்.