/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முழு வீச்சில் தயாராகும் அரசு மருத்துவமனை
/
முழு வீச்சில் தயாராகும் அரசு மருத்துவமனை
ADDED : ஜூலை 21, 2025 11:50 PM
திருப்பூர்; வேலம்பாளையத்தில் அமைந்துள்ள இரண்டாம்நிலை அரசு மருத்துவமனைக்கு, டாக்டர், செவிலியர் மற்றும் மருத்துவபணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர், வேலம் பாளையம் பகுதியில் இயங்கி வந்த மேம்படுத்தப்பட்ட நகர்நல மையம், அரசு துணை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. விரிவான மருத்துவ வசதிக்காக, தாலுகா மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம்நிலை மருத்துவமனையாக, தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன், 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு மருத்துவமனை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 12.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ உபகரண வசதியும் செய்யப்பட உள்ளது; பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் பரிந்துரையின்படி, அரசு மருத்துவமனை களுக்கு, புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. ஆவடி மற்றும் வேலம்பாளையம் அரசு மருத்துவமனைகளுக்கு, 64 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வேலம்பாளையத்தில், 27 கோடி ரூபாயில் இரண்டாம்நிலை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. தாராபுரத்தில், 24 கோடி ரூபாயில், கூடுதல் மருத்துவமனை, காங்கயத்தில், 12 கோடி ரூபாயில் தரம் உயர்த்தும் பணி, அவிநாசியில், 5.15 கோடி ரூபாயில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, உடுமலையில், 9 கோடி ரூபாய்க்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆவடி மற்றும் வேலம்பாளையம் அரசு மருத்துவமனைகளில், 64 பணியிடங்களை தோற்றுவித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம், 20 டாக்டர்கள், 35 செவிலியர்கள் உட்பட, 64 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப, பணியிடங்கள் பகிர்ந்துகொள்ளப்படும்.
அதன்படி, அடுத்த சில மாதங்களுக்குள், வேலம்பாளையம் அரசு மருத்துவமனை செயல்பட துவங்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.