/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளி ஆய்வக கட்டடம் அலங்கோலம்
/
அரசு பள்ளி ஆய்வக கட்டடம் அலங்கோலம்
ADDED : ஏப் 25, 2025 07:57 AM

பல்லடம், ஏப். 25--
பல்லடத்தில், அலங்கோலமாக காணப்படும் அரசு ஆண்கள் பள்ளி ஆய்வக கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.
பல்லடம் -- மங்கலம் ரோட்டில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில், பல்லடம் சுற்று வட்டாரத்தில் வசிக்கும், 600 மாணவர்கள் படிக்கின்றனர். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்காக வேதியியல் ஆய்வகம் உள்ளது. அரசு கல்லுாரி உருவானபோது, ஆண்கள் பள்ளியின் நிலத்தின் ஒரு பகுதி உயர்கல்வித் துறைக்கு மாற்றப்பட்டது.
இவ்வாறு மாற்றப்பட்ட கல்லுாரி இடத்தில்தான், அரசுப் பள்ளி ஆய்வக கட்டடம் அமைந்துள்ளது. கல்லுாரி பாதுகாப்பு கருதி, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் ஆய்வகத்துக்கு வந்து செல்ல வசதியாக, பிரத்யேகமாக 'கேட்' அமைக்கப்பட்டது.
இவ்வாறு, கல்லுாரி வளாகத்துக்குள் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளி ஆய்வக கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில், அரசுப் பள்ளி, கல்லுாரி வளாகங்களில், சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இங்கு வரும், சமூக விரோதிகள், அரசுப் பள்ளி ஆய்வக கட்டடத்தில் 'காதல்' ஓவியங்கள் வரைந்தும், பெயர்களை எழுதி வைத்தும், சுவரை அசிங்கப் படுத்தி உள்ளனர்.
மேலும், பழமையான இந்த கட்டடத்தில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து அலங்கோலமாக காணப்படுகிறது. ஆய்வுக்கு வந்து செல்லும் கல்வித்துறை அதிகாரிகளின் கண்களில் இது போன்ற அவலங்கள் தென்படாதது ஏன் என பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர். கல்லுாரி வளாகத்திற்குள் உள்ள ஆய்வக கட்டடத்தை பராமரித்து கல்லுாரி பயன்பாட்டுக்கே விட வேண்டும். அரசுப்பள்ளி வளாகத்திலேயே புதிய ஆய்வக கட்டடம் கட்டி முறையாக பராமரிக்க வேண்டும். அரசு பள்ளி, கல்லுாரி வளாகங்களில், சமூகவிரோதிகள் நுழையாத வகையில், 'சிசிடிவி' கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.