/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரப்பயிர் வளர்க்க அரசு மானிய உதவி
/
மரப்பயிர் வளர்க்க அரசு மானிய உதவி
ADDED : பிப் 16, 2024 01:34 AM
திருப்பூர்:'எண்ணெய் வித்து மரப்பயிர் வளர்க்க வழங்கப்படும் மானியத்தை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளின் வருமானத்தை பெருக்க, வேளாண்மைத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தேசிய எண்ணெய் வித்து மரப்பயிர்கள் திட்டத்தின் வாயிலாக, விவசாயிகளின் நிலங்களில் மரம் நடவு செய்ய மானிய உதவி வழங்கப்படுகிறது.காங்கயம் வட்டாரம், படியூர் கிராமத்தில் விஜயகரன் என்ற விவசாயி, மர எண்ணெய் வித்து பயிர்கள் திட்டத்தின் கீழ், ஒரு எக்டர் பரப்பளவில் வேம்பு எண்ணெய் வித்து மரப்பயிர் நடவு செய்துள்ளார்.
அவற்றை மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் அரசப்பன், தொழில்நுட்ப உதவியாளர் லாவண்யா, காங்கயம் வட்டார உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டு, பயிர் வளர்ச்சியை அறிந்துகொண்டனர்.
ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் அரசப்பன் கூறுகையில், ''தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், விவசாயிகள், தரிசாக வைக்கப்பட்டுள்ள தங்கள் விளை நிலங்களில், எண்ணெய் வித்து மரப்பயிர்களான வேம்பு பயிரிட, எக்டருக்கு, 17 ஆயிரம் ரூபாய்; புங்கன் பயிருக்கு, 20 ஆயிரம்; இலுப்பை பயிருக்கு, 15 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
நடவு செய்த மூன்றாண்டுகளுக்கு, ஊடு பயிரிடுதல் மற்றும் பராமரிப்பு மானியமாக, 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது,'' என்றார்.